வடக்கு கிழக்கின் மேல் திடீரென சீனாவிற்குக் கரிசனை வரக் காரணம் என்ன
இலங்கை அரசாங்கத்தின் உற்ற தோழனாய் இருக்கும் சீனா தமிழர்களின் விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக எவ்வாறான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும்? வடக்கு கிழக்கின் மேல் திடீரென சீனாவிற்குக் கரிசனை வரக் காரணம் என்ன? என தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் கேள்வியெழுப்பியுள்ளார்.
வடக்கு கிழக்கில் சினாவின் பிரவேசம் தொடர்பில் இன்றைய தினம் வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் அதிக நம்பிக்கை கொண்ட ஒரு நாடாக இருப்பது இந்தியா. பிராந்திய வல்லரசாகத் திகழும் இந்தியாவின் அனுசரணையுடன் தான் தமிழர்களுக்கான ஒரு தீர்வு கிடைக்கப்பெற முடியும் என்பதும் அரசியலாளர்களின் ஏகோபித்த கருத்துமாகும். அவ்வாறிருக்கையில் நம்மவர்கள் சிலர் சீனாவினை நாட வேண்டும் என்று கதைப்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு விடயமாகும்.
அகிம்சை ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் உரிமைக்கான போராட்டம், ஆயுத ரீதியில் அதியுச்சம் பெற்று தற்போது ஒரு ஜனநாயக ரீPதியிலான முன்னெடுப்புகiளை மேற்கொண்டு செல்கின்றது. இத்தகு நேரத்தில் ஜனநாயக விழுமியங்களை மதிக்கும் ஒரு நாட்டினையே நாம் அனுசரணையாகக் கொள்ள வேண்டும். சர்வதேச விழுமியங்களை மதித்து செயற்படும் நாடுகளுடனான எமது உறவே எமது மக்களுக்கான நேர்மையான தீர்வுக்கு வழிவகுக்கும். அதை விடுத்து சீனாவிடம் செல்வதென்பது முட்டாள் தனமான செயற்பாடாகவே இருக்கும்.
நாட்டிற்கு கடன் என்ற பெயரில் நிதியினைக் கொடுத்து நாட்டின் வளங்களைத் தன்வயப்படுத்திக் கொள்ளும் சினாவின் ஆதிக்கம் தற்போது வடக்கு கிழக்குப் பிராந்தியங்களிலும் வேறூன்ற ஆரம்பித்துள்ளது. இது தமிழர்களின் உரிமை தொடர்பான செயற்பாடுகளுக்குப் பாதகமாகவே அமையும். இதனை நம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் எவருடனும் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால் தீர்வு என்ற ஒன்று பெற வேண்டுமானால் அது இந்தியாவினூடாகவேதான் அமையும். சீனாவுடன் பேச வேண்டும் என்று இந்தியாவின் எதிர்ப்பினைப் பெறுவதென்பது எமது மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும். வடக்கு கிழக்கின் மேல் திடீரென சீனாவிற்குக் கரிசனை வரக் காரணம் என்ன?
எமது ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாணசபைகள் முறைமையானது தமிழர்களின் அபிலாசைகளுக்கான ஆரம்பப் புள்ளியாக இருக்கின்றது. இது தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வாக இல்லாவிட்டாலும். இதிலிருந்து அடுத்த அடுத்த கட்டங்களை நோக்கி நாங்கள் முன்நகர வேண்டும். அதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு மாத்திரமே வழிவகுக்கும்.
இலங்கை அரசாங்கத்தின் உற்ற தோழனாய் இருக்கும் சீனா தமிழர்களின் விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக எவ்வாறான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும்? எந்த நம்பிக்கையில் சீனாவுடன் தொடர்பினை எற்படுத்த முடியும்? போன்ற நிலைமைகளையெல்லாம் ஆராயாமல் கருத்திடக் கூடாது.
தாகத்தில் இருப்பவனுக்கு தூரத்தில் இருக்கும் கங்கையை விட பக்கத்தில் இருக்கும் குட்டையே மேலானது என்பார்கள். எனவே உரிமையை இழந்து தவிக்கும் மக்களின் உரிமையைப் பெற பக்கத்து தேசத்தை விடுத்து எங்கோ இருக்கும் சீனாவோடு கதைப்பதென்பது வேலிக்குள் இருப்பதை எடுத்து விட்ட கதையாகப் போய்விடும் என்று தெரிவித்தார்.