புதுக்குடியிருப்பில் அகற்றப்பட்ட சுவரொட்டிகள்.
புதுக்குடியிருப்பு பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்ட நிகழ்வை விளம்பரப்படுத்தும் முகமாக வைக்கப்பட்டுள்ள பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் தேர்தல் விதிமுறையினை மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, அங்கிருந்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. |
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் நாளைநடைபெற இருக்கும் நிலையில் குறித்த கூட்டத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்து கொள்ளவுள்ளார். இந்நிலையில், புதுக்குடியிருப்பு பேருந்து தரிப்பிடம் நிகழ்விற்கான முக்கிய இடமாக தேர்வு செய்யப்பட்டு அங்கு நிகழ்வை விளம்பரப்படுத்தும் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீ லங்காவினுடைய தேர்தல் கண்காணிப்பாளர்களால் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, நேரடியாக வந்த அதிகாரிகள் மற்றும் பொலிஸார் குறித்த பதாகைகளை உடனடியாக அகற்றியிருந்தனர். |