திமுகவில் இணையும் ஓ.பன்னீர்செல்வம்?

28.11.2025 13:00:00

டிசம்பர் 15ம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணையவில்லை என்றால் ஓ.பன்னீர் செல்வம் எடுக்கப்போகும் முடிவு குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி விரிவாக காண்போம்.

 

 

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி இருக்கும் என தெரிகிறது. இதற்கிடையே விஜய்யின் தவெக கட்சி களம் இறங்கி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி வருகிறது. இந்த சமயத்தில் அதிமுகவுக்குள் உட்கட்சி பிரச்சினை தலைதூக்கி வருகிறது. அதிமுகவை விட்டு அண்மையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியேறினார்.
இதனை தொடர்ந்து அவர் தற்போது விஜய்யின் தவெகவில் இணைந்தார். அதே சமயம் முன்னதாக வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் டிசம்பர் 15 வரை எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துள்ளார். அதற்கு பின்னர் அதிமுக ஒருங்கிணையவில்லை என்றால் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றார். இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் திமுகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

திமுகவில் இணைய ஓ.பிஎஸ் திட்டம்

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வரும் நிலையில், அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் எடுத்துள்ள புதிய அரசியல் முடிவு கவனத்தை ஈர்த்துள்ளது. அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்ற அவரது கோரிக்கை டிசம்பர் 15க்குள் நிறைவேறவில்லை என்றால், திமுக கூட்டணியில் சேரும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழக அரசியலில் புதிய கலக்கம் உருவாகியுள்ளது.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உருவாக்கியுள்ள ‘அதிமுக நிர்வாகிகள் உரிமை மீட்பு குழு’ கடந்த வாரம் சென்னைில் கூட்டம் நடத்தி தங்களது கருத்துகளை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளனர். அதில், அதிமுக ஒன்றிணைப்பு நடைபெறாவிட்டால் திமுக கூட்டணியில் சேருவது அரசியல் ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும் சரியான வழியாக இருக்கும் என்றே பலர் கருத்து தெரிவித்துள்ளனர். திமுக பின்பற்றும் பெரியார்–அண்ணா கொள்கைகள், அதிமுக தொடங்கப்பட்ட அடிப்படை நோக்கத்துடன் முரண்படுவதில்லை என்பதால், ஓபிஎஸ் திமுக அணியை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என்பதே அவர்களின் வாதம்.
ஓபிஎஸ்ஸின் நெருங்கிய ஆதரவாளர்களில் ஒருவரான முன்னாள் எம்எல்ஏ அ.சுப்புரத்தினம், திமுகவும் பெரியார்–அண்ணா கொள்கையையே பின்பற்றுகிறது. அதனால், அவசர சூழ்நிலையில் திமுக கூட்டணியில் சேருவது தவறில்லை. டிராவிட இயக்கத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய செயல்களில் ஓபிஎஸ் ஈடுபடமாட்டார் என்று கூறியுள்ளார்.
இதில் முக்கியமாக, ஓபிஎஸ்ஸின் மூத்த அரசியல் ஆலோசகரான பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் திமுக தலைமையிலான "வெற்றி கூட்டணியில்" இணைய வேண்டும் என்ற ஆலோசனையை தீவிரமாக வழங்கி வருவதாகவும் தகவல். 2024 பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி பெரிய வெற்றி பெற்றதும், அதிமுக பல மாவட்டங்களில் பின்தங்கி நிற்கும் நிலை ஏற்பட்டதும், இந்த ஆலோசனையை வலுப்படுத்துகிறது.

 

 

எடப்பாடி பழனிசாமிக்கு கெடு

மற்றுபுறம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தற்காலிகமாக நீக்கப்பட்டவர்களையும், கட்சியைத் துரோகம் செய்தவர்களையும் மீண்டும் சேர்க்க முடியாது என்று உறுதியான நிலைப்பாட்டில் உள்ளார். இதனால் ஓபிஎஸ்ஸின் அதிமுக மீண்டும் சேரும் முயற்சிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஓபிஎஸ், சமீபத்தில் விஜயின் TVK-வில் சேரலாம் என்ற தகவல்கள் வெளிவந்தபோதும், அவரது ஆதரவாளர்கள் TVK-வை ‘அரசியல் ரீதியாக பரிசோதிக்கப்படாதது’ என்றும் கூறி அந்த வாய்ப்பை எதிர்த்துள்ளனர். மூன்று முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ், அனுபவமற்ற கட்சியில் இணையக்கூடாது என்பதே அவர்களின் கருத்து. இந்நிலையில், திமுக கூட்டணியில் ஓபிஎஸ் இணைவது நடந்தால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும். முன்னாள் அதிமுக தலைவர்கள் சிலர் ஏற்கனவே திமுக அரசில் பதவிகளை வகித்து வருவது ஓபிஎஸ்ஸுக்கு ஊக்கமாக உள்ளது.