சுமந்திரனின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டது பாரிய அச்சுறுத்தல்!

17.07.2026 08:30:14

அனுராதபுர காலத்துக்கு முந்தைய சோழர் ஆக்கிரமிப்புக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் தமிழ் நாகரிகம் மற்றும் தாயகக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதற்காகச் சுமந்திரன் சமர்ப்பித்த முன்மொழிவை எவ்வித ஆய்வுகளுமின்றித் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஏற்றுக்கொண்டுள்ளமையானது நாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும் எனத் தேசப்பிரேமி ஜாதிக பெரமுன அமைப்பின் சட்டத்தரணி நுவன் பெல்லன்துடாவ குற்றம் சாட்டியுள்ளார்.

    

 

குறித்த அமைப்பின் காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அனுராதபுர காலத்துக்கு முந்தைய சோழர் ஆக்கிரமிப்புக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு, எமது நாட்டில் தமிழ் நாகரிகம் மற்றும் இந்தியத் தொடர்பு இருந்ததாகக் காட்டுவதற்கான முன்மொழிவொன்றைச் சுமந்திரன் தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பித்துள்ளார்.

இந்திய நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள இந்த ஆய்வுத் திட்டத்தின் ஆபத்தான பின்னணியைப் புரிந்துகொள்ளாமல், தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் இதனை ஏற்றுக்கொண்டுள்ளமை கண்டிக்கத்தக்கது.

வரலாற்று ரீதியாகச் சோழர் காலம் என்பது ஒரு ஆக்கிரமிப்புக் காலமே தவிர, அது எமது கலாசாரத்துடன் இணங்கி வாழ்ந்த வரலாறு அல்ல. இவ்வாறான போலிக் கோட்பாடுகள் மூலம் எமது பௌத்த மரபுரிமைகளைச் சிதைக்க முற்படுகின்றனர்.

மறுபுறம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்களை அகற்றுமாறும், காணிகளை விடுவிக்குமாறும் சர்வதேச அளவில் பொய்யான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நாட்டின் 3 இல் ஒரு பகுதி நிலப்பரப்பும், கடற்பரப்பும் இராணுவ வீரர்களின் தியாகத்தால் மீட்கப்பட்டவையாகும். போர்க்காலத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் 84,000 ஏக்கர் காணிகள் காணப்பட்ட போதிலும், தற்போதைய அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வெறும் 0.54 சதவீதமான நிலப்பரப்பு மாத்திரமே இராணுவக் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ளது. அதாவது 100 க்கு ஒரு வீதத்துக்கும் குறைவான காணிகளே இராணுவத்தினரிடம் உள்ளன.

ஒட்டுமொத்த வடக்கு மற்றும் கிழக்கிலும் தற்போது இராணுவக் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள 14,000 ஏக்கர் நிலத்தில், வெறும் 1,000 ஏக்கர் மாத்திரமே தனியார் காணிகளாகும். 30 ஆண்டு காலப் போரினால் முறையான காணிப் பத்திரங்கள் இல்லாத சூழலைப் பயன்படுத்தி, 1977 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து பயங்கரவாதத்தினால் வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களின் காணிகளுக்கு, போலியான காணிப் பத்திரங்களை தயாரித்து உரிமை கோரும் நிலை காணப்படுகிறது.

அதேபோல், அண்மையில் நடைபெற்ற தொல்பொருள் மாநாட்டில், வடக்கு, கிழக்கில் உள்ள வரலாற்றுப் பகுதிகளைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கிராமியக் குழுக்களிடம் ஒப்படைக்கவுள்ளதாக அத்துறைக்குரிய அமைச்சரும் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குழுக்கள் என்ற பெயரில் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கே அதிகாரம் வழங்கப்படவுள்ளது. இம்முறை தொல்பொருள் மாநாடு மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்தப்பட்டு, 10 தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதாகக் கூறுவது போலி தாயகக் கோட்பாட்டை உறுதிப்படுத்தும் ஒரு திட்டமோ என்ற சந்தேகம் எழுகிறது.

தற்போதைய அரசாங்கம் சர்வதேச அளவில் வாழும் புலம்பெயர் சமூகத்தின் ஆதரவுடன் இயங்கும் ஒரு வெளிநாட்டுச் சக்திகளின் முகவராகவே செயற்படுகிறது. கடந்த பொதுத்தேர்தலில் 50 சதவீதத்தைக் கூடப் பெற முடியாத அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம், உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாகவே 20 சதவீத ஆதரவை இழந்துள்ளது.

மக்கள் இந்த ஒட்டுமொத்த போலி அரசியல் மற்றும் பாராளுமன்ற முறையை நிராகரித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவின் பழைய பொருளாதாரக் கொள்கைகளையே இந்த அரசாங்கமும் முன்னெடுத்துச் செல்கிறது.

தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தி என்பது சஜித் பிரேமதாசவுக்கு அல்லது அநுர குமார திசாநாயக்கவுக்கு பின்னாலானது அல்ல. எனவே, எமது நாட்டின் இறையாண்மையையும் மரபுரிமைகளையும் பாதுகாக்க வேண்டுமாயின், நாம் சிறு சிறு விடயங்களுக்காகத் தனித்தனியாகப் போராடாமல், ஒட்டுமொத்தமாக ஒன்றிணைந்து இந்த தேசிய சக்திகளையும் அதற்குத் துணைபோகும் அரசாங்கத்தையும் தோற்கடிக்க வேண்டும் எனத் தேசப்பிரேமி ஜாதிக பெரமுன சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.