மத்திய வங்கி ஆளுநரின் உடனடி தீர்வை எதிர்ப்பார்த்துள்ள இறக்குமதியாளர்கள்

29.11.2021 05:52:36

பருப்பு, சீனி, கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்கள் மீண்டும் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளமை தொடர்பில், மத்திய வங்கி ஆளுநரின் உடனடி தீர்வை எதிர்ப்பார்த்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் தட்டுப்பாடு காரணமாக துறைமுகத்தில் தேங்கியிருந்த கொள்கலன்களை விடுப்பதற்கு தேவையான டொலரை வழங்குமாறு இதற்கு முன்னர் மத்திய வங்கி ஆளுநர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

எவ்வாறாயினும், தற்போது இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் மீண்டும் ஆயிரம் கொள்கலன்கள் இவ்வாறு தேங்கியுள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு அதனுடன் தொடர்புடைய பிரிவுகளுக்கு கடந்த வாரம் அறியப்படுத்தியிருந்த போதிலும், அதற்கான தீர்வு இன்னும் கிடைப்பெறவில்லையென அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இடம்பெறும் சந்திப்பில் கலந்துறையாடவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது