செயற்கை நுண்ணறிவுக்கான மையத்தை உருவாக்கத் தீர்மானம்!

27.03.2024 08:02:00

டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மையம் ஆகியவற்றை நாட்டில் நிறுவுவதற்கு தேவையான சட்டங்கள் இந்த ஆண்டின்  நடுப்பகுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

இந்திய உயர்ஸ்தானிகராலயமும் இலங்கை அரசாங்கத்தின் தொழில்நுட்ப அமைச்சும் இணைந்து,கொழும்பில் அமைந்துள்ள தனியார் ஹொட்டலில் நடத்திய  டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” நாட்டின் பொருளாதார மாற்றத் திட்டத்தை இலகுபடுத்தும் வகையில் புதிய நிறுவன கட்டமைப்பொன்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

தகவல் தொழில்நுட்ப சபை போன்ற தற்போதுள்ள கட்டமைப்புகளில் இருந்து விலகி, டிஜிட்டல் மாற்றத்திற்கான முகவர் நிலையம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான மையத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தியுள்ளோம். அதற்காக 2024 வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒரு பில்லியன் ரூபாயை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

விவசாயத்தை நவீனமயமாக்குவது, வறுமையை நிவர்த்தி செய்வது மற்றும் கல்வி முறையை சீர்திருத்துவது போன்றவற்றில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்லுள்ள வறுமையைக் குறைக்கும் தேசிய இலக்குடன் அரசாங்கம் செயற்படுகிறது.

உத்தேச முகவர் நிறுவனத்தை செயல்படுத்தும் வகையில் இந்த ஆண்டின் நடுப்பகுதிக்குள் அதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறோம்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.