போருக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை! கொந்தளித்த டென்னிஸ் பிரபலங்கள்
தன்னுடைய சக டென்னிஸ் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது நியாயமற்றது என பிரபல டென்னிஸ் வீரர்களான ரஃபேல் நடால் மற்றும் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் விளையாட ரஷ்ய வீரர்களான டேனில் மெத்வதேவ், ஆன்ட்ரி ரூப்லேவ், ரஷ்ய வீராங்கனை அனஸ்டேசியா பாவ்லிசென்கோவா மற்றும் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ரஷ்ய மற்றும் பெலாரஸ் வீரர், வீராங்கனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு ஸ்பெயினைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
'என்னுடைய சக டென்னிஸ் வீரர்கள், ரஷ்ய வீரர்கள் மீதான இந்த தடையானது நியாயமற்றது என்று நினைக்கிறேன். போரில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதில் அவர்களுடைய தவறு எதுவும் இல்லை. நான் அவர்களுக்காக வருந்துகிறேன். விம்பிள்டன் இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால் அரசாங்கம் அதனை செய்ய அவர்களை வற்புறுத்தவில்லை. வரும் வாரங்களில் வீரர்கள் இந்த விடயத்தில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்' என தெரிவித்துள்ளார்.
அதே போல், தனக்கும் இது போன்ற ஒரு நிகழ்வு இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்தது என்று செர்பிய டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,
'உங்களால் விளையாட முடியவில்லை என்பதை அறிந்து வெறுப்பாக இருக்கிறது. விம்பிள்டன் முடிவை நான் ஆதரிக்கவில்லை என்ற நிலைப்பாட்டில் நான் இன்னும் இருக்கிறேன். இது நியாயமல்ல, இது சரியுமல்ல என்று நான் நினைக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.