2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

12.11.2026 09:09:00

நாடாளுமன்றம் இன்று (12) பி.ப 1.30 மணிக்கு கூடவிருப்பதுடன், 2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் இன்றைய தினம் சபையில் முன்வைக்கப்படவுள்ளது.

 

இதன் பின்னர் நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் தொடர்பான விவாதம் (வரவுசெலவுத்திட்ட விவாதம்) நவம்பர் 13 ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 26 நாட்கள் நடைபெறவுள்ளது.

2026 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 13 ஆம் திகதி முதல் நவம்பர் 20 ஆம் திகதி வரை 07 நாட்கள் இடம்பெறவுள்ளது. 

இதனைத் தொடர்ந்து நவம்பர் 20 ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து, நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு குழுநிலை விவாதம் நடைபெறவிருப்பதுடன், டிசம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.

நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான விவாதம் நடைபெறும் சகல தினங்களிலும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல்  மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைகளுக்கான 05 வினாக்களுக்காகவும், மு.ப. 10.30 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான ஒரு கேள்விக்காகவும் நேரம் ஒதுக்கப்படும். 

 

அத்துடன், மு.ப. 11.00 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை வரவுசெலவுத்திட்ட மீதான விவாதம் நடைபெறும். 

வாக்கெடுப்புகள் நடைபெறும் நவம்பர் 20 மற்றும் டிசம்பர் 14 ஆகிய இரு தினங்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து தினங்களிலும், பி.ப. 6.00 மணி முதல் பி.ப. 6.30 மணி வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைகள் மீதான விவாதத்திற்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.