Digital Arrest செய்யப்பட்ட கர்நாடகாவின் முன்னாள் எம்.எல்.ஏ!

10.09.2025 14:24:31

“டிஜிட்டல் கைது” என்ற புதிய மோசடி முறையில் கர்நாடகாவின் முன்னாள் எம்.எல்.ஏ குண்டப்பா வக்கீல் சுமார் ரூ.31 லட்சத்தை இழந்துள்ளார். கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ குண்டப்பா வக்கீல் என்பவரை ஆகஸ்ட் 12ம் திகதி மோசடி நபர் ஒருவர் தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு, தொழிலதிபர் நரேஷ் கோயல் உடனான பண மோசடியில் வழக்கில் உங்களுக்கும் தொடர்பு இருப்பதாக அச்சுறுத்தியுள்ளனர்.

அத்துடன் குண்டப்பாவின் வங்கி கணக்குகள் மற்றும் ஏடிஎம் கார்ட் ஆகியவை இந்த மோசடியில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பீதியடைந்த குண்டப்பாவிடம் அனைத்து தனிப்பட்ட மற்றும் வங்கி கணக்குகளின் விவரங்களையும் மோசடி நபர்கள் சேகரித்துள்ளனர்.

பின்னர் பொலிஸ் துணை கமிஷனர் நீரஜ் குமார் என்று அறிமுகப்படுத்தி கொண்ட மோசடி நபர் குண்டப்பாவை டிஜிட்டல் அரெஸ்ட்(Digital Arrest) செய்வதாக தெரிவித்து, மறுநாள் வீடியோ அழைப்பு ஒன்றில் நீதிபதி வேடமணிந்த ஒருவரின் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

அப்போது நீதிபதி “தான் குற்றமற்றவர் என வாக்குமூலம் கடிதம் ஒன்றை எழுதுமாறும், ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட்(RTGS) என்ற முறையில் ரூ.10.99 லட்சத்தை குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு மாற்றவும் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த சில நாட்களில் மீண்டும் ஒருமுறை நீதிபதியின் வேடமணிந்த ஒரு நபரிடம் குண்டப்பா ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

அப்போது சிபிஐ விசாரணைக்காக ரூ.20 லட்சம் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு மாற்றுமாறு தெரிவித்ததோடு, பரிசோதனைகளுக்கு பிறகு பணம் திருப்பி தரப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளனர்.

ஆனால் இறுதி வரை பணம் திரும்பி வராததால், தான் மோசடியில் சிக்கியதை குண்டப்பா உணர்ந்துள்ளார்.

8 நாட்கள் நடந்த இந்த மோசடி குறித்து செப்டம்பர் 6ம் திகதி குண்டப்பா பொலிஸில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் தற்போது பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.