சுகாதார அவசர நிலை பிரகடனம்!

29.11.2025 13:50:50

நாட்டில் தற்போது உருவாகியுள்ள திடீர் அனர்த்த நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு தடையின்றி சுகாதார சேவைகள் வழங்குவதற்காக வெள்ளிக்கிழமை (28) முதல் டிசம்பர் 04 வரை ஒரு வார அவசர சுகாதார நிலையை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சகம் பிரகடனம் செய்துள்ளது.

இந்த அவசரநிலைக்கமைய, அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் இன்றைய தினம் முதல் மறு அறிவிப்பு வரும்வரை அனைத்து விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன என்றும், அதனைத் தெரிவிக்கும் விசேட சுற்றுநிருபத்தில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க கையொப்பமிட்டுள்ளார்.

நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் நோயாளர் பராமரிப்பு சேவைகள் 24 மணி நேரமும் தடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்ய தேவையான பணியாளர் ஒழுங்குமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அனர்த்தங்களுக்கு உள்ளான பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள், சிகிச்சையில் உள்ள நோயாளிகளில் வைத்திய ஆலோசனைக்கு ஏற்ப பாதுகாப்பாக வீடு திரும்பக்கூடியவர்களை விடுவிக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் அபாயமான நிலையில் உள்ள கட்டிடங்களில் அமைந்துள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பு பிரிவுகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துகள், மருத்துவ வாயுக்கள் மற்றும் அத்தியாவசிய உபகரணங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தேவையான நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனர்த்தநிலை காரணமாக ஏற்படக்கூடிய அவசர சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் (ICU) உள்ள நோயாளிகள் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை அருகிலுள்ள பாதுகாப்பான வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதற்கான முன்கூட்டிய திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திடீர் அனர்த்தநிலையை எதிர்கொள்ள சுகாதாரத் துறையின் முழுப் பலமும் செயல்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் அனைத்து சுகாதார அமைப்புகளும் மேம்பட்ட அவசர முன்னெச்சரிக்கைகளுடன் செயல்படுகின்றன.