நிலக்கரி மோசடியை மறைக்க மின்கட்டண அதிகரிப்பு!
|
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானமானது, அரசாங்கத்தின் நிலக்கரி மோசடியை மூடிமறைப்பதற்கான ஒரு முயற்சியாகும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட குற்றம் சாட்டியுள்ளார். |
|
நுகேகொடையில் அமைந்துள்ள அக் கட்சியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கடந்த மே மாதம் 09 ஆம் திகதி மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனையொன்றை தேசிய முறைமை செயற்பாட்டாளர் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்வைத்திருந்தார். அந்த சந்தர்ப்பத்திலேயே இக்கட்டண அதிகரிப்புக்கு நாங்கள் எமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தோம். இருப்பினும், மக்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட அனைத்து எதிர்ப்புகளையும் புறந்தள்ளிவிட்டு, தற்போது 18 சதவீதத்தினால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இந்தக் கட்டண திருத்தமானது கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளுக்கு மாத்திரமே பொருந்தும் எனவும், இதனால் சாதாரண வீட்டுப் பாவனையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அரசாங்கம் ஒரு தர்க்கத்தை முன்வைக்கின்றது. ஆனால், கைத்தொழில் துறையில் ஏற்படும் மின்சாரக் கட்டண அதிகரிப்பு ஏனைய அனைத்துத் துறைகளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் மொத்த மின்சாரப் நுகர்வில் 35 முதல் 44 சதவீதமே வீட்டுப் பாவனையாக உள்ளது. எஞ்சிய 60 சதவீதமான மின்சாரம் கைத்தொழில் மற்றும் வணிக ரீதியாகவே பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, ஒரு கடையில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள இறைச்சி உள்ளிட்ட பொருட்களின் விலையானது, அந்தக் கடைக்கு விதிக்கப்படும் மின்சாரக் கட்டண அதிகரிப்புடன் நேரடியாக உயர்வடையும். எனவே, மறைமுகமாகச் சகல நுகர்பொருட்களின் விலைகளும் அதிகரிப்பதையே இது சுட்டிகாட்டுகிறது. மறுபுறம், மின்சாரக் கட்டண அதிகரிப்பால் ஏற்படும் சுமையைக் குறைக்க திறைசேரியிலிருந்து 15 மில்லியன் ரூபாயை நிவாரணமாக வழங்குவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். திறைசேரி என்பது மக்களின் வரிப்பணமே தவிர வேறொன்றுமில்லை. மின்சாரப் பட்டியலினூடாக ஒரு நிவாரணத்தைக் கொடுத்துவிட்டு, மீண்டும் பருப்பு மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மீது வரி விதிப்பதன் மூலம் அந்தப் பணத்தை மக்களிடமிருந்தே அறவிடும் தந்திரத்தையே அரசாங்கம் கையாள்கிறது. இங்குள்ள மிக முக்கியமான விடயம் யாதெனில், மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக அரசாங்கம் முன்வைத்த தரவுகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை என்பதாகும். தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்டத்தையும், அதனை ஈடுகட்ட கடந்த காலங்களில் அதிக விலைக்கு டீசலைப் பெற்று மின்சாரம் உற்பத்தி செய்ததால் ஏற்பட்ட நட்டத்தையும் மக்கள் மீதே சுமத்த அரசாங்கம் தற்போது தயாராகி வருகின்றது. சுருக்கமாகக் கூறின், அரசாங்கத்தின் நிலக்கரி மோசடியை மறைக்கவே இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது. அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியும் இந்த விடயத்தில் வெறும் நாடகங்களையே அரங்கேற்றுகின்றது. முறையான தர்க்கரீதியான விமர்சனங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, எதிர்க்கட்சியினரும் மௌனம் காப்பதன் மூலம் அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்துக்கு மறைமுக ஆதரவை வழங்குகின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, இந்த அநீதியான மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிராக ஒன்றிணையுமாறு நாம் நாட்டு மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார். |