மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும்!

01.09.2025 08:24:28

யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் ஐனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வடக்கில் உள்ள பொதுமக்களின் காணிகளை முழுமையாக விடுவிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் அது மட்டுமின்றி சைவ சமயத்தவர்களின் வணக்க ஸ்தலங்களையும் விடுவிக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாண வருகை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதை தெரிவித்தார் .

ஐனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு முதலாம் திகதி வருகைதந்து பல திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக அறிகின்றோம் .அவரது வருகை ஆக்கபூர்வமாக அமையவேண்டுமானால் நீண்டகால போரினால் பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினரின் பயன்பாட்டில் அவர்களது ஆதிக்கத்தின்கிழ் உள்ளது.

இத்தகைய காணிகள் பொதுமக்களின் பயன்தரும் நிலங்களாகும் பல வளங்களை கொண்டதாகும் அத்தகைய காணிகளை விடுவிப்பதன் மூலம் மக்கள் தமது அன்றாட தேவைகளை தாங்களே நிறைவேற்றி கொள்ளமுடியும் யாரையும் எதிர்பார்க்கவேண்டிய தேவை இருக்காது எனவே இந்த மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இது மட்டுமன்றி காங்கேசன் துறை கடற்கரையில் புராதன அடையாளமாக விளங்கிய சுக்கிரபாத திருகோண சக்கர சத்திரம் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் தல்சவன விருந்தினர் விடுதி அமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. மேலும் காங்கேசன் தூறை கிரிமலையில் அமைந்துள்ள சடையம்பாள் மடம் மற்றும் ஆதிசிவன்கோவில் இடித்து அழிக்கப்பட்டுள்ளது.

இவற்றை மிள கட்டுவதற்கும் இந்து மக்களின் பல புராதன மடங்கள், ஆலயங்கள் விடுவிக்கபடாதும் உள்ளது இவற்றையும் விடுப்பதற்கு யாழ்வரும் ஐனாதிபதி துரித நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக இந்த நிலங்கள் இருப்பதனால் ஐனாதிபதி நல்லெண்ண செயற்பாடாக இதனை விடுவிப்பதற்கு துரித நடவடிக்கைகளை யாழ் விஜயத்தில் காண்பிக்கவேண்டும் என்றார்.