ரணிலைச் சந்தித்தார் சஜித்!
|
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் இடையிலான சந்திப்பு கடந்த 13ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. |
|
கொழும்பு, கொள்ளுப்பிட்டி, 5ஆம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நீடித்துள்ளது. மிகவும் இரகசியமாகப் பேணப்பட்ட இந்தச் சந்திப்பு, நாட்டின் தற்போதைய அரசியல் போக்கு குறித்த முக்கியமான கட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பிற்கு முன்னதாக, 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை சஜித் பிரேமதாசவின் பிரதிநிதிகளான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் கபீர் ஹாசிம், பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் லக்கி ஜயவர்தன ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவை அவரது இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளனர். அந்தச் சந்திப்பில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் தொடர்ச்சியாகவே சஜித் - ரணில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. |