மார்க் உட் விலகல்
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து மார்க் உட் விலகினார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. லார்ட்சில் நடந்த இரண்டாவது டெஸ்ட், நான்காவது நாளில் பீல்டிங் செய்த போது, பவுண்டரி எல்லையில் விழுந்த வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட் 31, வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் லீட்சில் நாளை துவங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டார்.
தற்போது இங்கிலாந்து அணியில் இருந்து மார்க் உட் நீக்கப்பட்டார். இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) வெளியிட்ட அறிக்கையில்,‘‘வலது தோள்பட்டை காயம் காரணமாக மார்க் உட், மூன்றாவது டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்படுகிறார். இருப்பினும் தொடர்ந்து அணியுடன் தங்கியிருப்பார். போட்டி முடிவில் இவர் காயம் குறித்து மருத்துவ குழு ஆராய்ந்த பின், அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்,’ என தெரிவித்துள்ளது.
இவருக்குப் பதில் சாகிப் மகமூது 24, டெஸ்டில் அறிமுக வாய்ப்பு பெற காத்திருக்கிறார். ஏற்கனவே ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ், தற்போது மார்க் உட்டும் அணியில் இல்லாதது இங்கிலாந்துக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அணி விபரம்: ஜோ ரூட், பட்லர், டேவிட் மாலன், மொயீன் அலி, ஆண்டர்சன், பேர்ஸ்டோவ், பர்ன்ஸ், சாம் கர்ரான், ஹசீப் ஹமீது, லாரன்ஸ், சாகிப் மகமூது, ஓவர்டன், ஓலியே போப், ராபின்சன்.