ரணிலின் ரிட் மனுவை பரிசீலிக்க திகதி குறிப்பு!
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக தம்மை பிரதிவாதியாக பெயர் குறிப்பிட்டு, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வழங்கப்பட்டுள்ள பரிந்துரையை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, ஐ.தே.க. தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 2022 ஜனவரி 28 ஆம் திகதி பரிசீலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 2 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுவையே ( ரிட் மனு) இவ்வாறு பரிசீலிக்க நீதிமன்றம் இவ்வாறு தீர்மானித்துள்ளது.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான நிசங்க பந்துல கருணாரத்ன, தேவிகா அபேரத்ன மற்ரும் டி.எம். சமரகோன் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு நேற்று (9) ஆராயப்பட்ட போதே இவ்வாறு பரிசீலனைக்கான திகதி குறிக்கப்பட்டது.
நேற்றைய தினம் மனு மீதான ஆராய்வின் போது, மனுதாரரான ரணில் விக்ரமசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மன்றில் ஆஜரானார்.
இந்த ரிட் மனுவில் பிரதிவாதிகளாக அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் தலைவராக செயற்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன, உறுப்பினர்களான முன்னாள் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சந்ரசிறி ஜயதிலக, முன்னாள் காவல்துறைமா அதிபர் சந்ரா பெர்ணான்டோ, ஆணைக்குழுவின் செயலாளர், மற்றும் ஜனாதிபதியின் செயலர் பி.பீ. ஜயசுந்தர ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
தனக்கு எதிராக குறித்த ஆணைக் குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள் அமுல் செய்யப்படுவதை தடுத்து தற்காலிகமாக இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறும், மனுவை விசாரணைக்கு ஏற்று விசாரணை செய்து குறித்த பரிந்துரைகளை வலுவிழக்கச் செய்யும் வகையில் தீர்ப்பொன்றினை வழங்குமாறும் குறித்த எழுத்தாணை மனுவூடாக ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.
நல்லாட்சி அரசின் காலப்பகுதியில், செயற்பட்ட ஊழல் ஒழிப்பு குழு தொடர்பில், பிரதிவாதிகளின் ஆணைக் குழு விசாரணை ஒன்றினை முன்னெடுத்ததாக குறிப்பிட்டுள்ள மனுதாரரான ரணில் விக்ரமசிங்க, பின்னர் அவர்களின் அறிக்கையில் தனக்கு எதிராகவும் பாரிய குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளதாக ஊடகங்கள் ஊடாக அறிந்துகொண்டதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த ஆணைக் குழுவின் விசாரணைகளின் போது, தன் பக்க நியாயங்களை முன் வைக்க போதுமான அவகாசம் தமக்கு வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, நல்லாட்சி காலத்தில் செயற்பட்ட ஊழல் ஒழிப்பு செயலகம் அமைச்சரவையின் ஒப்புதலுடனேயே ஏற்படுத்தப்பட்டதாகவும், அதற்கான செலவீனங்கள் அனைத்தும் சட்ட ரீதியிலானவை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் அரசியல் பழி வாங்கல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு சட்டத்துக்கும் இயற்கை நீதிக் கோட்பாட்டுக்கும் மாற்றமாக செயற்பட்டு விசாரணை நடத்தியுள்ளதாகவும், அதனால் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க குறித்த ரிட் மனுவூடாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படியே அவர் குறித்த பரிந்துரைகளுக்கு எதிராக எழுத்தாணையைக் கோரியுள்ளார்.
ஏற்கனவே, இதனை ஒத்த ரிட் மனுக்களை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சி.ஐ.டி. முன்னாள் பிரதானி ரவீ செனவிரத்ன, முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அரச சட்டவாதி ஜனக பண்டார உள்ளிட்டோரும் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.