காலணி உற்பத்தியில் தமிழகத்தை மாற்ற திட்டம்.
தமிழகத்தை உலகளாவிய காலணி உற்பத்தியின் மிக முக்கிய மையமாக மாற்றும் நோக்கில், இத்தாலி பல்கலைக்கழகத்துடன் கோத்தாரி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
காலணி உற்பத்தியில் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இத்தாலியின் புகழ்பெற்ற ‘இத்தாலியன் யுனிவர்சிட்டி ஆஃப் ஆர்ட் அண்ட் டிசைன்’ பல்கலைக்கழகத்துடன், கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் ஜின்னா ரஃபீக் அகமது செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா இடையே கையெழுத்தாகியுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாகும்.
இதன்மூலம் தோல் அல்லாத காலணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 17 சதவீத வரி தற்போது பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளதால், ஏற்றுமதி வளர்ச்சி அதிகரிக்கக்கூடும்.
குறிப்பாக, கடந்த 6 மாதங்களில் அமெரிக்க வரி விதிப்புக்கு பின் இந்தியாவுக்கு வரவேண்டிய ஏராளமான முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இந்தோனேஷியாவுக்கு சென்றுவிட்டன. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்தால் மீண்டும் பிரபல நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
தற்போது கோத்தாரி நிறுவனம் பெரம்பலூரில் ‘கிராக்ஸ்’ பிராண்டு காலணிகளை தயாரித்து வரும் நிலையில், கரூரில் ‘அடிடாஸ்’ பிராண்டுக்கான பிரம்மாண்ட உற்பத்தி ஆலையை கட்டி வருகிறது.
மேலும், கோவையைச் சேர்ந்த ‘ஜோடிஸ்’ மற்றும் ‘சீட்லோ’ பிராண்டுகளை கையகப்படுத்தியுள்ள கோத்தாரி நிறுவனம், அடுத்தகட்டமாக 70 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள சர்வதேச பிராண்டான ‘கிக்கர்ஸ்’ நிறுவனத்தையும் கையகப்படுத்தவுள்ளது.ஒரு இந்திய நிறுவனம் சர்வதேச பிராண்டின் உரிமையை மட்டும் பெறாமல், அந்த நிறுவனத்தையே உரிமையாளராக முழுமையாக கையகப்படுத்துவது இதுவே முதல் முறை.
மேலும், காலணி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை தயாரிப்பதற்காக உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து பெரம்பலூரில் ஒரு பிரத்யேக மூலப்பொருள் பூங்காவும் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் சில்லறை வர்த்தகத்தில் உள்ள 2,500 விற்பனை நிலையங்களை 6 ஆயிரமாகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
இப்பணிகளின் மூலம், அடுத்த 2 ஆண்டுகளில் தமிழகம் உலக அளவில் காலணி உற்பத்திக்கான பெரிய இடமாக மாறியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் கோத்தாரி நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி என்.முத்துமோகன் உடனிருந்தார்.