புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய அபிவிருத்தி பணி.

16.09.2025 08:19:17

“Clean Sri Lanka” திட்டத்துடன் இணைந்ததாக கொழும்பு மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டம் இன்று (15) காலை ஜனாதிபதி அநரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. 

வளமான நாடு - அழகான வாழ்க்கையை உருவாக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு இணங்க, “Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் 425 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி இந்த நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

1964ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் 60 ஆண்டுகளில் மூடப்பட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மற்றும் கவர்ச்சிகரமான பேருந்து நிலையமாக முழுமையாக அபிவிருத்தி செய்யப்படும் முதற்சந்தர்ப்பம் இதுவாகும். 

இலங்கை விமானப்படையின் நேரடி ஆளணி பங்களிப்பு மற்றும் கொழும்பு மாநகர சபை, இலங்கை மின்சார சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, வீதி அபவிருத்தி அதிகார சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட ஏனைய தொடர்புடைய நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது. 

அதே நேரத்தில் தேசிய புத்திஜீவிகள் அமைப்பு (NIO Engineering)உள்ளிட்ட அமைப்புகளும் இதில் தன்னார்வமாக பங்கேற்கின்றன. 

இந்த திட்டத்தை 2026 ஏப்ரல் மாதம் வரும் சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வில் உரையாற்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தாமல் ஒரு நாடு வளர்ச்சியடைய முடியாது என்று கூறினார். 

பொதுப் போக்குவரத்து என்பது ஒரு நாட்டின் பொருளாதார செயல்முறையின் முக்கிய பகுதியாகும் என்பதை சுட்டிக்காட்டிய அவர், மக்களுக்கு வசதியான மற்றும் குறைந்த செலவுள்ள பொதுப் போக்குவரத்து சேவையை வழங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைவதை விரைவுபடுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.