அருண் விஜயின் 'ரெட்ட தல'

25.04.2024 08:52:03

நட்சத்திர வாரிசாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானாலும் தன்னுடைய தனித்துவமான அடையாளத்திற்காக இருபத்தெட்டு ஆண்டுகளுக்கும் மேல் கடுமையாக உழைத்து முன்னணி நட்சத்திர அந்தஸ்தை எட்டிப்பிடித்து இருக்கும் நடிகர் அருண் விஜய் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ரெட்ட தல' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் இயக்குநரும், நடிகருமான மோகன் ராஜா வெளியிட்டார்.

இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரெட்ட தல' எனும் திரைப்படத்தில் அருண் விஜய், சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், கார்த்திக் யோகி, பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். எக்சன் என்டர்டேய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை பி டி ஜி யுனிவர்சல் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பொபி பாலச்சந்திரன் தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இப்படத்தின் டைட்டில் என்னுடைய குருநாதரும், இயக்குநருமான ஏ ஆர் முருகதாஸிடம் இருந்தது. இந்தப் படத்திற்கு இந்த டைட்டில் பொருத்தமானதாக இருந்ததால் அவருடைய பிறந்தநாளன்று நேரில் சென்று வாழ்த்து தெரிவதற்கு முன் இந்த டைட்டில் வேண்டும் என கேட்டேன் அவர் மனமுவந்து கொடுத்துவிட்டார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வித்தியாசமான கான்செப்ட்டுடன் அமைக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் வேண்டுகோள் விடுத்தது. இதற்காக அருண் விஜய்யிடம்  இரண்டு மிருகங்கள் ஒன்றை ஒன்று தாக்கி அழித்துக் கொள்கின்றன. மிருகங்கள் என்ற உடன் அவை ஆடை அணிந்திருக்காது. இதற்கு நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டவுடன், உடனே ஒப்புக்கொண்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்காக கடுமையாக உழைத்தார். இரட்டை வேடத்தில் அவர் நடிப்பதால்  ஃபர்ஸ்ட் லுக்கிற்காக கடுமையாக உழைத்து, அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தில் தோற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் பார்வையாளர்கள் எளிதில் யூகிக்காத வகையில் திருப்பங்கள் உண்டு. இது ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

இந்நிகழ்வில் படத்தை தயாரிக்கும் பி டி ஜி யுனிவர்சல் நிறுவனத்தின் இலச்சினை வெளியிடப்பட்டது.