இந்தியன் 2 படம் எப்படி இருக்கிறது?

14.07.2024 00:33:04

கமல் - ஷங்கர் கூட்டணியில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது. முதல் பாகத்தோடு ஒப்பிட்டால், இரண்டாம் பாகம் எப்படியிருக்கிறது?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 'இந்தியன் - 2: Zero Tolerance' நேற்று வெளியானது.

இப்போது ஒரு தலைமுறை காலகட்டத்திற்குப் பிறகு வெளியாகியுள்ளது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான 'இந்தியன் - 2'. முதல் பாகத்தில், சுதந்திரப் போராட்ட வீரராக இருந்த சேனாபதி தனது மகளின் மரணத்திற்குப் பிறகு லஞ்சம் வாங்கியவர்களைக் கொலை செய்து, சமூகத்தைச் சீர்திருத்த முயல்வார்.

ஒரு கட்டத்தில் தனது மகன் சந்திரபோஸ் வாங்கிய லஞ்சத்தால் 40 குழந்தைகள் இறந்துவிட, அவரையும் கொலை செய்வார் சேனாபதி. அதற்கான இறுதிக் காட்சியில் விமான விபத்தில் அவர் இறந்துவிட்டதாகப் பலரும் கருதுவார்கள்.

ஆனால், அதிலிருந்து அவர் தப்பி, ஹாங்காங்கில் இருப்பதைப் போல முதல் பாகம் முடிவடையும்.

இந்த இரண்டாம் பாகம் தற்காலத்தில் நடக்கிறது. சமூக அவலங்கள் குறித்து, யு-டியூபில் 'பார்க்கிங் டாக்' என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் சில இளைஞர்கள். ஒரு கட்டத்தில், அவர்களால் எதிர்கொள்ள முடியாத அளவுக்குப் பிரச்னை நேரும்போது, இந்தியன் தாத்தாவை நினைவுகூர்ந்து, #comebackindian என டிரெண்ட் செய்கிறார்கள்.

அப்போது தாய்பெய்யில் வசிக்கும் இந்தியன் இதைப் பார்த்து நாடு திரும்புகிறார். தானே ஊழலை ஒழிக்கும் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வதைவிட, ஒவ்வொருவரும் தனது வீட்டிலிருந்து ஊழலை ஒழிக்கத் தொடங்க வேண்டும் என்கிறார்.

அதைப் பார்க்கும் சில இளைஞர்கள் அதுபோலச் செய்து, சொந்த வாழ்வில் பெரும் இழப்பைச் சந்திக்கிறார்கள். குறிப்பாக கதாநாயகன் தனது தாயையே இழக்க வேண்டியிருக்கிறது. இதற்கிடையில் இந்தியனும் சில கொலைகளைச் செய்கிறார். ஆனால், சொந்த வாழ்வில் இழப்பைச் சந்தித்த இளைஞர்கள், இந்தியனை வெறுக்கத் தொடங்குகிறார்கள். அப்போது #Gobackindian என டிரெண்ட் செய்கிறார்கள்.

மக்களிடம் வெறுப்பு ஏற்படுகிறது. அவரைப் பிடிக்க முயலும் காவல்துறை அதிகாரி பிரமோத் அவரைத் தீவிரமாகத் துரத்துகிறார். இந்த நிலையில் இந்தியன் என்ன செய்கிறார் என்பது மீதிக் கதை.