தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முன்னுரிமை திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

04.08.2023 10:05:10

அரசு செயல்படுத்தி வரும் ஒவ்வொரு திட்டங்களின் தற்போதைய நிலை எந்த அளவில் உள்ளது என்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்தினார். திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களிடம் சென்றடைந்து உள்ளது என்பதை கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். சென்னை:    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இப்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமும் செப்டம்பர் 15-ந்தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. மக்கள் நலத் திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்வதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாதம் ஒருமுறை சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தை கூட்டி ஒவ்வொரு திட்டங்களின் செயல்பாடு எந்த அளவுக்கு உள்ளது என்பதை ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் முன்னுரிமை திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். இந்தக் கூட்டத்தில் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, முத்துசாமி, தா.மோ. அன்பரசன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பெரியகருப்பன், கயல்விழி, செல்வராஜ் கலந்து கொண்டனர். இவர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கூட்டுறவுத்துறை, உள்ளாட்சித்துறை, வீட்டு வசதி வாரியத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துறை, வருவாய்த் துறை, ஆதி திராவிட நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலாளர்கள், நிர்வாக இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.