தனித்து ஆட்சியமைக்க முடியாத தேசிய மக்கள் சக்தி!

28.10.2024 08:54:57

தனித்து நின்று ஜனாதிபதியுடைய கட்சியால் ஆட்சி செய்யமுடியாது என்ற செய்தியை எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் சொல்லியிருப்பதுடன் சிறுபான்மை மக்களுக்காக பேசக்கூடிய ஆளுமை உள்ள தலைவராக சஜித்பிரேமதாச மாத்திரமே இருப்பதாக முன்னாள் அமைச்சரும்,வன்னிமாவட்ட வேட்பாளருமான றிசாட் பதியூதீன் தெரிவித்தார்.

   

வவுனியாவில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எல்பிட்டிய பிரதேசசபை தேர்தல் முடிவுகள் நாட்டுக்கு ஒரு செய்தியை சொல்லியிருக்கின்றது. அதாவது கடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார 42 சதவீதமான வாக்குகளை பெற்றிருந்தார். அந்தவகையில் 58 சதவீதமான வாக்குகள் அவருக்கு எதிராக இருந்தது.

ஜனாதிபதி தேர்தலின் பிறகு உடனடயாக ஒரு தேர்தல் நடக்குமாக இருந்தால் வாக்குகள் அதிகரிப்பதுவே வழமை. ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்ற செய்தியை எல்பிட்டிய தேர்தல் நாட்டுமக்களுக்கு சொல்லியிருக்கின்றது.

அந்த தேர்தல் முடிவுகளின் படி தனித்து நின்று ஜனாதிபதியுடைய கட்சியால் ஆட்சி செய்யமுடியாது என்ற செய்தியும் சொல்லப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் வாக்குகள் குறைவடைந்துகொண்டே செல்கின்றது.

எனவே தமிழ் பேசுகின்ற மக்கள் ஆழமாக சிந்தித்து இந்ததேர்தலில் தங்களது பிரசதேசங்களுக்காக பணியாற்றக்கூடிய நல்லவர்களுக்கு சந்தர்பத்தை வழங்கவேண்டும். வன்னியில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆசனங்கள் எமக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் முல்லைத்தீவில் சிறந்த ஒரு கல்விமானான றமணனை களம் இறக்கியிருக்கிறோம்.

தேர்தலுக்கு முன்னர் பேசுவது இலகுவாக இருக்கலாம். பேசிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது கடினம். செய்யக்கூடியதை சொல்லியிருந்தால் மாத்திரமே செய்யமுடியும்.

எனவே நாம் ஒரு கோசத்திற்காக ஏமாந்து வாக்களித்து விடாமல் ஒன்றுபட்டு எமக்கு சேவைசெய்யக்கூடிய வேட்பாளர்களை தெரிவுசெய்யவேண்டும். அது தமிழ்கட்சிகளாக இருந்தாலும் பரவாயில்லை முஸ்லீம் கட்சிகளாக இருந்தாலும் பறவாயில்லை.

நாம் எமது தலைமைகளை இழந்துவிடக்கூடாது. சிறுபான்மை சமூகங்கள் தலைமைகளை இழந்துவிட்டால் நம்மை அடக்கி துன்பப்படுத்தும் போது அதற்கு எதிராக பேசுவதற்கு தலைமைகள் இல்லாத நிலையே ஏற்ப்படும்.

ஒருகாலத்தில் சம்பிக்கவும்,சன்ன ஜயசுமனவும் சஜித்துடன் இருப்பதாக சொன்னார்கள். ஆனால் தற்போது சம்பிக்க சஜித்துடன் இல்லை, சன்னஜயசுமனவும் இல்லை அவர்களை சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார். எனவே சிறுபான்மை மக்களுக்காக பேசக்கூடிய அல்லது தீர்வை பெற்றுக்கொள்ளும் ஆளுமை உள்ள தலைவராக சஜித்பிரேமதாசவையே பார்க்கின்றோம். ஏனைய எதிர்கட்சிகளையும் இணைத்துக்கொண்டு ஆட்சியமைக்க கூடிய வாய்ப்பு எமக்கு இருக்கிறது. என்றார்.