“மாணவர்களின் போரா*ட்டத்திற்கும் படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை”.

24.07.2026 13:45:24

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்துக் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதமாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகக் கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி நடத்த முயன்றனர். அப்போது அவர்கள் மீது காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

  

இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான விஜய் நடித்த கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி ஒரு வழியாக நேற்று (23.07.2026) உலகமெங்கும் வெளியாகிது. முதல்வராக விஜய்யின் முதல் படம், சினிமாவில் கடைசி படம் என்ற சூழ்நிலையில் வெளியாகியுள்ளதால் விஜய்யின் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் படத்தைத் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். வழக்கம் போல் திரையரங்கில் பேனர், பட்டாசு, டிஜே கச்சேரி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே முதல்வர் விஜய் நேற்று முன்தினம் இரவே சென்னை அடையாறு தாகூர் திரைப்பட கல்லூரியில் படம் பார்த்து மகிழ்ந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று (24.07.2026) செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவரிடம்மாணவர்கள் நடத்தி வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் போது,‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியிடப்பட்டதால், போராட்டத்தின் தீவிரம் குறைக்கப்பட்டதாக மாணவர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். போராட்ட உணர்வில் இருந்த மாணவர்களை படம் பார்க்க வைத்து, அவர்களின் கவனத்தை திசைதிருப்பிவிட்டார்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களே குற்றம்சாட்டுகிறார்கள்” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “மழுங்கடித்தார்கள் என்று எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. யாரை மழுங்கடித்தார்கள்? என்று தெரியவில்லை. படம் எப்போது வெளியாகும் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, திட்டமிட்ட தேதியிலேயே வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டத்திற்கும் இந்தப் படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தப் படத்தை பார்ப்பதன் மூலம் மக்களுக்கு சுறுசுறுப்பும் சிந்தனையும் ஏற்படுமே தவிர, யாருடைய மூளையையும் மழுங்கடிக்கும் படமல்ல. வார்த்தைகளின் மூலம் மக்களை திசைதிருப்பும் முயற்சியில் யாரும் ஈடுபடக் கூடாது என்பதில் நான் அக்கறையுடன் இருக்கிறேன்” என்றார்.