சசிகலாவை குறி வைக்கும் விசாரணை வளையம்

29.10.2022 15:29:48

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் அளித்துள்ள தகவல்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருப்பதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜெய லலிதாவுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு அது தொடர்பாக அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை சுற்றியே இந்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. சசிகலா அளித்துள்ள பதிலில், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாைவ சேர்த்ததற்கான காரணத்தை விவரித்துள்ளார். ஜெயலலிதாவின் இதயத்திலும், நுரையீரலிலும் பிரச்சினைகள் இருப்பதை குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்சினைகளை கண்டறிய மருத்துவர்கள் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து செல்லலாம் என்று பரிந்துரை செய்ததை ஏன் ஏற்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக எழுந்துள்ளது. அதுபோல வெளிநாடுகளில் இருந்து வந்த மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகளும் ஏற்கப்படாதது ஏன்? என்ற கேள்வியையும் ஆறுமுகசாமி ஆணையம் எழுப்பி உள்ளது. மிக முக்கியமாக ஜெயலலிதா மரணமடைந்த நேரத்தில் நிலவும் மர்மமும் சந்தேகத்தை அதிகரிக்க செய்துள்ளது. எனவே இதில் உண்மையை கண்டறிய தமிழக அரசு அமைக்கப் போகும் அடுத்தக்கட்ட விசாரணை சசிகலாவை சுற்றியே அமையும் என்று பேசப்படுகிறது. மீண்டும் சசிகலா விசாரணை வளையத்துக்குள் வரப்போவது தவிர்க்க முடியாது என்கிறார்கள்.