தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை முறைமை என்பது முழுமையாகத் தோல்வியடைந்துள்ளது

24.07.2021 10:53:52

தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை முறைமை என்பது முழுமையாகத் தோல்வியடைந்துள்ளது என்பதே தனது நிலைப்பாடு என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாகாணசபை முறைமையானது தற்போது தெற்கிலுள்ள அரசியல்வாதிகளுக்கான வரப்பிரசாதங்களை வழங்கக்கூடியவாறான வெள்ளை யானையாக மாறியிருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

அதுமாத்திரமன்றி சர்வதேச அழுத்தங்கள் ஏற்படக்கூடும் என்பதனால் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தையும் அதுகுறித்த சட்டத்தையும் தற்போதைய அரசாங்கம் முழுமையாக இல்லாதொழிக்காமல் இருக்கிறது என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இருப்பினம் தற்போது அந்த அலுவலகத்திற்கான நிதிவழங்கல் நிறுத்தப்பட்டிருப்பதன் விளைவாக அவ்வலுவலகம் இருந்தும் இல்லாத நிலையை அடைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் உலகின் ஒரு பலம்மிக்க சக்தியுடன் மாத்திரம் நெருங்கிப் பயணித்து ஏனைய நாடுகளை புறந்தள்ளிச் செயற்படுவதனால் எதிர்வருங்காலத்தில் பூகோள அரசியல் நெருக்கடியொன்றுக்கு நாடு முகங்கொடுக்க வேண்டியேற்படலாம் என்றும் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இந்தியாவும் சீனாவும் மிகமுக்கிய உலக பொருளாதார சக்திகளாக வலுப்பெற்றுவரும் நிலையில், அவற்றுடன் சமாந்தரமான பொருளாதாரத் தொடர்புகளையும் நெருக்கத்தையும் பேணுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.