சென்னையில் இன்று தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டம்!
|
சென்னையில் இன்று தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இன்று மாலை 4 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் வைப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும், கூட்டணிக்கு தலைவர், ஒருங்கிணைப்பாளர் நியமனம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் - தவெக இடையே மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் இறங்கிய தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. |
|
ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை அக்கட்சிக்கு இல்லாத நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு திமுக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளான காங்கிரஸ், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், இடதுசாரி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இதில் விசிக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையிலும் இடம் ஒதுக்கப்பட்டது. அதே நேரத்தில் வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு அளிப்போம், அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறி வந்தன. இந்த நிலையில், தவெக தலைமையிலான கூட்டணியை உருவாக்கும் முயற்சியை விஜய் மேற்கொண்டுள்ளார். கடந்த ஜூலை 1 ஆம் தேதி சென்னை கோவளத்தில் தனியார் விடுதியில் ஆதரவு அளித்த கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்காமல் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர்த்தன. இந்த நிலையில்தான், தவெகவுக்கு ஆதரவு அளித்த கட்சிகளின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. முதல்வர் விஜய் தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டணிக்கு பெயர் கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ், விசிக, மதிமுக இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தவெக நிர்வாகிகள் புஸ்சி ஆன்ந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்து இருந்தனர். இந்த அழைப்பை ஏற்று காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் பங்கேற்க முடிவு செய்துள்ளன. இந்த கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் வைக்கப்படுகிறது. அதேபோல, கூட்டணிக்கான குறைந்தபட்ச செயல் திட்டமும் வகுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல கூட்டணிக்கான தலைவராக விஜய் தேர்வு செய்யப்படலாம் என்றும் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் உருவாக்கப்பட்டு அதில் கூட்டணி கட்சியின் தலைவர்கள் நியமனம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. வைகோவுக்கு பதவி ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மதிமுக பொதுச்செயாளர் வைகோ அல்லது காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் யாராவது ஒருவர் நியமிக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் தவெக - காங்கிரஸ் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு உள்ளிட்டவைகளுக்கு மத்தியில் இன்று கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. |