ஈரானில் சிறைவைக்கப்பட்டுள்ள தம்பதி.

03.07.2025 09:14:35

கடந்த மூன்று ஆண்டுகளாக இரண்டு பிரெஞ்சு குடிமக்களை ஈரான் சிறை வைத்திருப்பதற்கு பிரான்ஸ் தனது கண்டனத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. குறித்த இருவர் மீதும் இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனத்திற்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிசிலி கோஹ்லர் மற்றும் அவரது காதலர் ஜாக் பாரிஸ் ஆகியோரை முற்றிலும் தன்னிச்சையான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மேலும், வெளியான அறிக்கை உறுதிசெய்யப்பட்டால், குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்றே தூதரக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவரும் அப்பாவிகள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, தூதரகப் பாதுகாப்பு உரிமையை மீறியதற்காக ஈரானுக்கு எதிராக மே மாதம் பிரான்ஸ் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. மே 2022 முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள கோஹ்லர் மற்றும் பாரிஸின் தடுப்புக்காவல் தொடர்பாக ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாகவே சர்வதேச நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.

ஈரானின் புரட்சிகர காவல்படை சமீபத்திய ஆண்டுகளில் டசின் கணக்கான வெளிநாட்டு மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களை, பெரும்பாலும் உளவு பார்த்தல் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைத்துள்ளது.

மட்டுமின்றி, வெளிநாட்டு கைதிகளை பேரம் பேசும் கருவிகளாக ஈரான் பயன்படுத்துவதாக மனித உரிமைக் குழுக்களும் மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டுகின்றன, ஆனால் ஈரான் அதை மறுத்துள்ளது.