எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் டிரோன் விரட்டியடிப்பு

08.05.2022 11:26:54

பாகிஸ்தானில் இருந்து சமீபகாலமாக டிரோன்கள் மூலமான அச்சுறுத்தல் அதிக அளவில் இருந்து வருகிறது.

இதன் காரணமாக டிரோன்களை கண்காணிக்கவும், அவற்றை சுட்டு வீழ்த்தவும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், எல்லை பாதுகாப்பு படையினருக்கும் (பி.எஸ்.எப்.) பிரத்யேக பயற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஜம்முவில் உள்ள அரினா செக்டார் பகுதியில் இருக்கும் சர்வதேச எல்லை பகுதிக்குள் நேற்று இரவு 7.25 மணியளவில் டிரோன் ஒன்று பறந்தது. டிரோனில் சிறிய சிவப்பு விளக்குகள் மின்னியதால் அதனை பி.எஸ்.எப். வீரர்கள் கண்டறிந்தனர். அந்த டிரோன் பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்ததும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர் டிரோனை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர்.

இதனால் டிரோன் அங்கிருந்து உடனடியாக பாகிஸ்தானுக்குள் பறந்து மறைந்துவிட்டது.

துப்பாக்கியால் சுடுவது தெரிந்ததும் ரிமோட் கண்ட்ரோல் மூலமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அல்லது ராணுவத்தினர் அந்த டிரோனை அந்நாட்டுக்கு திருப்பி இருக்கலாம் என்று எல்லை பாதுகாப்பு படை இயக்குனர் எஸ்.பி.சாந்து தெரிவித்துள்ளார்.

அந்த டிரோனில் இருந்து ஆயுதம் உள்ளிட்ட ஏதேனும் பொருட்கள் எல்லை பகுதியில் போடப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.