லிசிசான்ஸ் நகரம் ரஷ்ய துருப்புகள் வசம் -உக்ரைன்

04.07.2022 10:20:23

உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கடைசி பெரிய நகரான லிசிசான்ஸ்கை ரஷ்ய படையினர் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக, ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷொய்கு தெரிவித்துள்ளார்

ஆனால், லிசிசான்ஸ்கில் தொடர்ந்து சண்டை நடந்து வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

சியெவெரோடொனட்ஸ்க், லிசிசான்ஸ்க் நகரங்களுக்கு இடையே ஓர் ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றை வடக்கிலிருந்து முதல்முறையாக ரஷ்ய படையினர் சனிக்கிழமை கடந்தனர். இதனால், லிசிசான்ஸ்க் நகர் வீழ்வது உறுதியானது.

அதன்படி, லிசிசான்ஸ்கை ரஷ்ய படையினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

லுஹான்ஸ்க் மற்றும் அதன் அருகேயுள்ள டொனட்ஸ்க் மாகாணங்கள் டான்பாஸ் பிராந்தியம் என அழைக்கப்படுகிறது. வடக்கு உக்ரைன் மற்றும் தலைநகர் கீவிலிருந்து ரஷ்ய படை வெளியேறியதிலிருந்து டான்பாஸ் பிராந்தியத்தை நோக்கி கவனம் செலுத்தி வருகிறது.

ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் டான்பாஸ் பிராந்தியத்தில் சில பகுதிகளை 2014ஆம் ஆண்டுமுதல் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். உக்ரைன் மீதான போரைத் தொடங்குவதற்கு முன்னர் டான்பாஸ் பிராந்தியத்தை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்தது.

அந்த நாடுகளை உக்ரைன் இராணுவத்திடமிருந்து பாதுகாக்க தனது படையை அனுப்புவதாகக் கூறித்தான் போரையே தொடங்கியது.