இன்று பொதுப்போக்குவரத்து நிறுத்தம்:

30.11.2024 09:11:51

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு 'ஃபெங்கல்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரைச் சவுதி அரேபியா பரிந்துரைத்துள்ளது. இந்த புயல் இன்று (30.11.2024) பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

  

முன்னதாக இந்த புயல் காற்றழுத்த தாழ்வாக கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கணிப்புகள் பொய்யாகும் நிலையில் புயல் சின்னம் உருவாவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உருவாகியுள்ள 'ஃபெங்கல்' புயலானது புயலாகவே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை சென்னை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை மாநகராட்சி பூங்காக்கள், கடற்கரைகள் அனைத்தும் நாளை மூடப்பட இருக்கிறது. அதேபோல் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அரசு அறிவுரை வழங்கியுள்ளது. பொது இடங்களுக்கு அத்தியாவசிய தேவை இல்லாமல் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இசிஆர், ஓஎம்ஆர் சாலையில் நாளை புயல் கடக்கும் நேரத்தில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் அனைத்து பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்பொழுது (29/11/2024) இரவு 8 மணி நிலவரம் படி சென்னையில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து 230 கிலோமீட்டர் தொலைவிலும், நாகையிலிருந்து 240 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. புயலின் வேகமானது 13 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து அதிகரித்து 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.