அரசாங்கம் ஊடகத்துறையை அத்தியாவசிய தேவையாக கருதுகின்றதா?

04.07.2022 09:39:30

ஊடகத்துறையையும் அத்தியாவசிய சேவையாக கருதி ஊடகவியலாளர்களுக்கும் எரிபொருட்களை பெற்றுக் கொடுக்க சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் ஊடகவியலாளருமான சுப்பிரமணியம் தியாகு கோரிக்கை முன்வைத்துள்ளார்.

ஹட்டனில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

நாட்டில் இன்று எல்லா இடங்களிலும் மக்கள் வீதிக்கு வந்து போராட்டங்களை நடத்தியே தங்களுடைய பிரச்சனைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றார்கள்.

இதனை சரியான தரப்பினரிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது ஊடகங்களே. ஆனால் ஊடகவியலாளர்கள் எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்கு எந்தவிதமான திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை.

இன்று நாட்டில் அநேகமான சேவைகளை அரசாங்கம் அத்தியாவசிய தேவைகளாக கருதுகின்றது. ஆனால் ஊடகத்துறையை அத்தியாவசிய தேவையாக கருதுகின்றதா? என்ற கேள்வி எமக்கு எழுகின்றது.

ஊடகவியலாளர்கள் பல மணித்தியாலங்களாக அல்லது பல நாட்களாக வரிசைகளில் நின்று எரிபொருட்களை பெற்றுக் கொள்ள முடியாது. அதற்கு காரணம் அவர்கள் களத்திற்கு சென்று மக்களுடைய பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரவேண்டிய பொறுப்பு இருப்பதால்.

எனவே அவர்கள் ஒரே இடத்தில் இருந்து கொண்டு அதனை செய்ய முடியாது. அவர்கள் தங்களுடைய கடமைகளை சரியாக செய்ய வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு எரிபொருட்களை பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

இதனை மிகவும் இலகுவான முறையில் நடைமுறைபடுத்த முடியும். ஏனெனில் அரசாங்கத்தின் தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையின் ஊடாக இவர்களுக்கான எரிபொருட்களை மிகவும் இலகுவான முறையில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க முடியும்.

குறிப்பாக இன்று  ஊடகவியலாளர்கள் காலையில் எழுந்தவுடன் அவர்களுக்கு இருக்கின்ற பிரச்சினை, இன்றைய நாளுக்கான செய்திகளை எவ்வாறு தலைமையகத்திற்கு அனுப்புவது.

சம்பங்கள் நடைபெறுகின்ற இடத்திற்கு எவ்வாறு செல்வது. அது மட்டுமல்லாமல் காரியாலயங்களில் கடமையில் இருக்கின்றவர்கள் தங்களுக்கான முறையான போக்குவரத்து இன்மை காரணமாக பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு ஊடகத்துறையையும் அத்தியாவசிய தேவையாக கருதி அவர்களுக்கான எரிபொருட்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.