
வியட்நாமில் படகு விபத்துக்குள்ளானதில் 37 பேர் உயிரிழப்பு!
வியட்நாமில் சுற்றுலாப்பயணிகள் படகு ஒன்று புயலில் சிக்கி விபத்துக்குள்ளானதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
53பேருடன் பயணித்துக்கொண்டிருந்த வொன்டர் சீ என்ற படகே இவ்வாறு அனர்தத்திற்குள்ளாகியுள்ளது.
ஹா லாங் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை காண தினமும் ஆயிரக்கண சுற்றுலா பயணிகள் வருகை தருகின்ற நிலையில் தலைநகர் ஹனோயில் இருந்து 53 சுற்றுலா பயணிகள் நேற்று பிற்பகல் படகு மூலம் ஹா லாங் வளைகுடா பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இதன்போது, தென் சீன கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட புயல்காற்றினால் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, படகில் பயணித்த அனைவரும் கடலில் விழுந்துள்ளனர்.
இதன்போது விரைந்து செயற்பட்ட அந்நாட்டு மீட்பு குழுவினர் கடலில் விழுந்தவர்களில் 11 பேரை உயிருடன் மீட்டுள்ளதாகவும் ஐந்து பேருக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இவ்விபத்தில் 8 குழந்தைகள் உட்பட 37 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் அனேகமானவர்கள் வியட்நாமியர்கள் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, தலைகீழாக கவிழ்ந்த படகிற்குள் சிக்குண்டிருந்த 10 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.