“உழைப்பை அள்ளிக்கொடுங்கள், உதயசூரியன் உதிக்கட்டும்”.
|
தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (16.03.2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். அப்போது சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “திமுக போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் நானே (மு.க. ஸ்டாலின்) போட்டியிடுவதாகக் கருதி 100 சதவீத அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். |
|
கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதே இலக்கு ஆகும். அரசியல் களத்தில் நமது கை ஓங்கி இருக்கிறது. கூட்டணியில் குழப்பம் விளைவிக்க நினைத்தவர்களின் சதியை முறியடித்து பலமான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் திமுக தான் எப்போதும் 'நம்பர் 1' ஆக இருந்து வருகிறது. கடந்த ஓராண்டு உழைப்பை அறுவடை செய்யும் காலம் இது. ஒரு சிறு சறுக்கல் கூட ஏற்பட்டுவிடக் கூடாது. தேவையற்ற முறையில் யாராவது பிரச்சினைகளை உண்டாக்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 234 தொகுதிகளையும் நானே நேரடியாகக் கண்காணிக்கப் போகிறேன்” எனப் பேசியதாக கூறப்படுகிறது மேலும் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உழைப்பை அள்ளிக்கொடுங்கள். உதயசூரியன் உதிக்கட்டும். வீடுதோறும் சென்றடைந்துள்ள திராவிட மாடலின் சாதனைகள். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள். அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி; துணிச்சல். இதுதான் தி.மு.க. ஏப்ரல் 23 அன்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்திலும், நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரின் சின்னங்களிலும் அளிக்க அயராது பாடுபடுவோம். திராவிட மாடல் 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். |