
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்.
ஜம்மு காஷ்மீரில் அண்மையில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக பஹல்காமில் செவ்வாய்க்கிழமை (22) தீவிரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒரு அதிகாரியும், உளவுத்துறைப் பணியகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியும் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்களை வெளியேற்றுவதற்காக இராணுவ ஹெலிகொப்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
ஏனெனில் அந்தப் பகுதிக்கு கால்நடையாகவோ அல்லது குதிரையில் சென்றோ மட்டுமே செல்ல முடியும்.
தாக்குதலின் பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மாலை ஸ்ரீநகருக்கு விஜயம் மேற்கொண்டார்.
அங்கு ஜம்மு-காஷ்மீர் காவல்துறை பணிப்பாளர் ஜெனரல் நளின் பிரபாத் அவருக்கு விளக்கம் அளித்தார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி – தனது இரண்டு நாள் சவுதி அரேபியா பயணத்தை முடித்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவுக்கு திரும்பினார்.