சங்கு கூட்டணிக்கு 11 ஆசனங்கள்!
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 11 ஆசனங்களை பெறும் என கூட்டணியின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். |
வன்னி தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனுவை இன்று (10) தாக்கல் செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வன்னியில் எமது அணி சார்பில் போட்டியிடும் அத்தனை பேரும் விடுதலைக்காக போராடியவர்கள். அந்த விடுதலையை அகிம்சை வழியில் பெறுவதற்காக நாங்கள் இன்று தேர்தலில் போட்டியிடுகிறோம். அற்ப சலுகைகளைகளுக்காக நாங்கள் துணை போகமாட்டோம். தமிழ் மக்களுக்கு தலைமைதாங்குவதற்கு நாங்கள் இருக்கிறோம். நீங்கள் கவலையடைய வேண்டாம். இனத்தின் விடுதலையினை நோக்கிச் செல்லும் சின்னமாக சங்கு சின்னம் இருக்கிறது. இதேவேளை, பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூடுதலான ஆசனங்களை பெறாது. எனவே, தமிழர்களாகிய நாங்கள் அதிக ஆசனங்களை இனத்தின் சார்பாக வெல்கின்றபோது நிர்ணயிக்கும் சக்தியாக நாங்கள் மாறுவோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது. எமது கூட்டமைப்பு இந்த தேர்தலில் 11 ஆசனங்களை பெறும். 10 ஆசனங்கள் மக்களால் தெரிவுசெய்யப்படும் என்பதுடன் தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் கிடைக்கும். பதினொரு ஆசனங்களை கொண்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கையினை நாம் எடுப்போம். இதேவேளை அரசுக்கு ஆதரவளிக்கும் சூழலுக்கு நாங்கள் இன்னும் வரவில்லை என்றார். |