நாடாளுமன்றத்தை 40 இலட்சம் டிராக்டர்களுடன் முற்றுகையிடும் விவசாயிகள்

24.02.2021 09:00:00

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் 40 இலட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக விவசாய சங்கத்தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் சிகர் பகுதியில் ஐக்கிய கிசான் மோர்ச்சா சங்கம் சார்பில் கிசான் மகா பஞ்சாயத்து பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த குறித்த அமைப்பின் தலைவரான  ராகேஷ் திகாய்த் மேற்படி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “ வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் இந்த முறை பாராளுமன்றத்தை நோக்கி பேரணி செல்வோம். எந்த நேரத்திலும் நாங்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட இருக்கிறோம். இதற்காக விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும்.

இதற்கான திகதி அறிவிக்கப்படும். பேரணிக்கான நேரத்தை அறிவித்துவிட்டு டெல்லியை நோக்கி புறப்படுவோம். முன்பு 4 லட்சம் டிராக்டர்கள் கலந்து கொண்டன. தற்போது 40 லட்சம் டிராக்டர்களுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையான சிங்கு, திக்ரி, காஜிப்பூர் ஆகிய இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட  பேச்சுவார்த்தைகள் தோல்வியை தழுவவே விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளளனர்.