முக்கிய சாட்சியாளர்கள் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்களா?
|
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் மற்றும் நாட்டில் முக்கிய வழக்குகளின் சாட்சியாளர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்படுகிறார்களா என்பது குறித்து சர்வஜன அதிகாரம் கட்சியின் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் அழைப்பாளர், சட்டத்தரணி நளின் பத்திரன குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
|
|
கட்சியின் காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் குறித்து முறையான மரணப் பரிசோதனைகளோ அல்லது நீதவான் விசாரணைகளோ நடத்தப்படுவதற்கு முன்னதாகவே, அது ஒரு தற்கொலை என ஊடகங்கள் அவசர அவசரமாகப் பிரசாரம் செய்துள்ளன. இத்தகைய உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை உருவாக்குவதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் பெரும் அநீதியை விளைவிக்கின்றது. கடந்த காலங்களில் இடம்பெற்ற தாஜுதீன் கொலை, பிரகீத் எக்னெலிகொட மற்றும் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்குகளைப் போன்றே தற்போதும் முக்கிய சாட்சிகள் மறைக்கப்படும் போக்கு காணப்படுகின்றது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் 323 கொள்கலன்கள் காணாமல் போயின. இது குறித்து முதன்முதலில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய டான் பிரீசாத் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோல், எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கின் முக்கிய சாட்சியாளரான கபில சந்திரசேன மற்றும் 2.5 மில்லியன் டொலர் விவகாரத்துடன் தொடர்புடைய ரங்க ராஜபக்ஷ ஆகியோரும் அண்மையில் கொலை செய்யப்பட்டுள்ளனர் அல்லது தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பாரதூரமான வழக்குகள் நிலுவையில் உள்ள போது, அவற்றின் முக்கிய சாட்சியாளர்கள் அல்லது எதிரிகள் கொலை செய்யப்படுவதோ அல்லது தற்கொலை செய்துகொள்வதோ தொடர்கதையாகியுள்ளது. சி.டி.விக்ரமரத்ன கடந்த வாரம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்கிய வாக்குமூலத்தில், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைகளின் போது சாரா ஜாஸ்மின் மரணமடைந்ததை உறுதிப்படுத்துவதற்காக பல டி.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நாட்டின் பலம்வாய்ந்த அரசியல்வாதி ஒருவர் தனக்கு அழுத்தம் கொடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான முக்கிய சாட்சியங்களை வழங்கிய முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் விசாரணை அதிகாரிகளின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களுக்கு இந்த அரசாங்கமே முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டும் என்றார். |