15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி நடுக்கடலில் தவித்த 19 அகதிகள்!

06.08.2026 08:30:49

ஸ்பெயின் அருகே 15 நாட்களாக உணவு, தண்ணீரின்றி நடுக்கடலில் தத்தளித்த 17 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக அஞ்சப்படுகிறது. வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயின் அருகே உள்ள பாலோரிக் தீவுகளுக்கு சென்ற படகு ஒன்று பழுதாகி நடுக்கடலில் நின்றதில், அதிலிருந்த 17 அகதிகள் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அந்த படகில் இருந்தவர்கள் கிட்டத்தட்ட 15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி தவித்து வந்ததாக செவ்வாய்க்கிழமை ஸ்பெயின் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஸ்பெயின் கடற்படையினர், மல்லோர்கா தீவுக்கு அருகே தென்மேற்கே உள்ள 12.7 நாட்டிக்கல் தொலைவில் தத்தளித்த படகில் இருந்து இருவரை மீட்டனர்.

அவர்கள் இருவரும் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் தகவலில், தங்களுடன் படகில் 19 பேர் பயணித்ததாகவும். என்ஜின் பழுதாகி 15 நாட்களாக நடுக்கடலில் படகு தத்தளித்ததன் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் 17 பேர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஸ்பெயின் மீட்பு குழுவினர் அப்பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் தீவிரமான தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

ஸ்பெயினில் நாளுக்கு நாள் அகதிகள் வருகை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 211 படகுகளில் 3,935 பேர் அகதிகளாக பாலோரிக் தீவுக்கு வந்து இருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் கூட மொராக்கோவில் இருந்து கிட்டத்தட்ட 72,000 அகதிகள் செவுடாவிற்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த எல்லையை கடக்கும் முயற்சியில் கிட்டத்தட்ட 75 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.