அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களை கருத்திற்கொண்டு, இராணுவச் செலவுகள் மற்றும் ஆயுத மோதல்களை விட அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி, மனித உரிமைகள் மற்றும் பகிரப்பட்ட பொருளாதார முன்னேற்றத்திற்கு சர்வதேச சமூகம் முன்னுரிமை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று (19) Inter Pares அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிய சர்வதேச பயிலரங்கில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம், பொருளாதார வலுவூட்டல், இளைஞர்களின் பங்கேற்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களையும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையின் சனத்தொகையில் 51–52 சதவீதம் பெண்களாக இருந்தபோதிலும், பாராளுமன்றத்தில் அவர்களின் பிரதிநிதித்துவம் 9.8 சதவீதமாக மட்டுமே உள்ளதாக சுட்டிக்காட்டிய சஜித், தொழிலாளர் படையில் பெண்களின் பங்கேற்பு 33–34 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
பெண்களுக்கு கல்வி, தொழில் வாய்ப்பு, தொழில்முயற்சி, நிதி வசதிகள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.