செம்மணி மயானத்தில் இனஅழிப்பு நினைவகம்.

18.06.2026 15:37:57

செம்மணி சித்திபாத்தி இந்து மயானத்தை, எம்மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பின் சாட்சியமாகப் பேணும் வகையில் அதனை ஓர் நினைவகமாக மாற்றும் முன்மொழிவை நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரன் சபை அமர்வில் முன்வைத்துள்ளார்.

    

 

இந்த முன்மொழிவு குறித்து உரையாற்றிய தவிசாளர் மயூரன், "இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு புதைக்கப்பட்ட எமது உறவுகள், இன்று செம்மணி சித்திபாத்தி இந்து மயானத்திலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். எம்மீது நிகழ்த்தப்பட்ட கோரமான இன அழிப்பின் சாட்சியமாக இந்த மயானம் காணப்படுகின்றது. இந்தச் சாட்சியங்களைப் பாதுகாப்பதும், அதன் வரலாற்றை இளைய தலைமுறைக்குக் கடத்துவதும் எமது தார்மீகப் பொறுப்பாகும்" என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், "குறித்த மயானம் எமது சபை எல்லைக்குள் அமைந்துள்ள நிலையில், இதனைத் தொடர்ந்தும் ஒரு சாதாரண மயானமாகப் பயன்படுத்தாது, இன அழிப்பின் நினைவகமாகப் பேணுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இது தொடர்பில் மயான சபையினருடன் கலந்துரையாடி, முழுமையான விபரங்களுடன் அடுத்த சபை அமர்வில் இந்த முன்மொழிவை ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றச் சமர்ப்பிப்பேன்" என்றார்.