வட, கிழக்கில் நிலவும் பிரச்சினைகள் எனக்குப் பெரிதும் அதிர்ச்சியளிக்கின்றன
வட, கிழக்கில் தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் அம்மாகாணங்களைச் சேர்ந்த பலரிடம் கேட்டறிந்ததாகவும், அவை தனக்குப் பெரிதும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்திருந்ததாகவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான வன்முறைகள் என்பன தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தொடர்ச்சியாக வலியுறுத்திவருவதுடன், சர்வதேச அரங்கில் இலங்கை மீதான அழுத்தங்களையும் பிரயோகித்துவருகின்றது.
அந்தவகையில் மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு கடந்த சனிக்கிழமையுடன் (18) 15 வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில், முதன்முறையாக தெற்காசியப்பிராந்தியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், கடந்த வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடைந்தார்.
இவ்விஜயத்தின்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் (18) கலந்துகொண்ட அவர், பல்வேறு முக்கிய தரப்பினருடன் சந்திப்புக்களையும் நடாத்தியிருந்தார். அதன் ஓரங்கமாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் சிவில் சமூகப்பிரதிநிதிகளைச் சந்தித்த செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், அவர்களிடம் நாட்டின் சமகால மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் விரிவாகக் கேட்டறிந்துகொண்டார்.
மூன்று பிரிவாக நடைபெற்ற இச்சந்திப்புக்களில் ஒன்றில் கலந்துகொண்டிருந்த 'அரகலய' போராட்டக்காரர்கள் உள்ளிட்ட செயற்பாட்டாளர்களிடம் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு நாட்டில் நிலவும் சுதந்திரம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் மீதான ஒடுக்குமுறைகள் என்பன தொடர்பில் அக்னெஸ் கலமார்ட் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அவர்கள், அமைதியான முறையில் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்கள்மீது ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதாகவும், ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு முன்னரே அதற்கு எதிராகத் தடையுத்தரவு பெறப்படுவதாகவும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை மேலும் பல்வேறு வழிகளில் மறுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.
அதேவேளை இச்செயற்பாட்டாளர்களில் அங்கம்வகித்த தனியொரு தமிழ் பிரதிநிதியான ராஜ்குமார் ரஜீவ்காந்த், நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் அக்னெஸ் கலமார்ட்டிடம் எடுத்துரைத்தார். குறிப்பாக அரசியல்கைதிகள் விவகாரம், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், இராணுவமயமாக்கல், தொல்பொருள் திணைக்களத்தின் துணையுடன் இடம்பெறும் காணி சுவீகரிப்புக்கள், பௌத்த சிங்களமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர் விளக்கமளித்தார்.
அதுமாத்திரமன்றி விசேடமாக தமிழர் விவகாரத்தில் சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் அரசுக்கு வலுவான அழுத்தம் பிரயோகிக்கவேண்டியது அவசியம் எனவும் அவர் செயலாளர் நாயகத்திடம் வலியுறுத்தினார். அவற்றை செவிமடுத்த அக்னெஸ் கலமார்ட், தாம் உரிய அழுத்தத்தை வழங்குவதாக உறுதியளித்தார்.
அத்தோடு வட, கிழக்கில் தான் பல்வேறு தரப்பினரை சந்தித்தாகவும், அவர்களிடம் பல விடயங்களைக் கேட்டறிந்துகொண்டதாகவும் தெரிவித்த அக்னெஸ் கலமார்ட், அவை தனக்குப் பெரிதும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.