வர்த்தக ரீதியான விமானங்களை இயக்க பாகிஸ்தான் முடிவு

11.09.2021 15:51:39

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ள நிலையில், அந்நாட்டுடன் வர்த்தக ரீதியான விமானங்களை இயக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் கடந்த ஆக., 15ம் தேதி தலிபான்கள் வசம் வந்தது. அங்கு தற்போது இடைக்கால அரசு அமைந்துள்ளது. முல்லா முகமது ஹசன் அகுந்த் அந்நாட்டின் இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். காபூல் விமான நிலையத்தை சீரமைக்கும் பணிகளைக் கத்தார் அரசு மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் சர்ச்சைக்குப் பின்னர் அந்நாட்டுடன் முதல் வர்த்தக ரீதியான போக்குவரத்தைத் தொடங்க உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பி.ஐ.ஏ., எனப்படும் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா கான் கூறுகையில், 'பாகிஸ்தானில் இருந்து காபூலுக்கு வர்த்தக ரீதியிலான விமானங்களை இயக்க உள்ளோம். விரைவில் வழக்கமான விமானப் போக்குவரத்தும் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். எங்களது சில வாடிக்கையாளர்கள் தங்களின் உறவினர்களை ஆப்கனில் இருந்து மீட்க கோரினர். அதற்காக இந்த முறை முதலில் சில சார்ட்டர் விமானங்களை இயக்க உள்ளோம்' என்றார்.