மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

13.08.2025 08:52:59

மட்டக்களப்பு நகரில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நீதிகோரிய கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (13) காலை முன்னெடுக்கப்பட்டது.

 

செம்மணி,முல்லைத்தீவு சம்பவங்களுக்கு நீதிகோரியும் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விரோத செயற்பாடுகளுக்கு நீதிகோரியும் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவிடத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் ஆகியோரும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன்,பிரதி முதல்வர் தினேஸ்,தவிசாளர்கள்,மாநகரசபை உறுப்பினர்கள்,பிரதேசசபை உறுப்பினர்கள்,முன்னாள் மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,தமிழீழ விடுதலை இயக்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது சர்வதேச நீதிவிசாரணை வேண்டும், இராணுவமே வெளியேறு, சத்துருக்கொண்டான் படுகொலைக்கு நீதிவேண்டும், சர்வதேசமே எங்களுக்கு நீதியைப்பெற்றுத்தா, தமிழர் தாயகம் தமிழர்களுடையது, செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதிவேண்டும், முல்லைத்தீவு இளைஞன் படுகொலைக்கு நீதிவேண்டும் போன்ற பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டன.