மக்களவைக்கு கனிமொழி அளித்த நோட்டீஸ்

03.12.2024 07:50:53

தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என நேற்று திமுக எம்பி டிஆர் பாலு மக்களவைக்கு நோட்டீஸ் அளித்த நிலையில், தற்போது திமுக எம்பி கனிமொழி புதிய நோட்டீஸ் ஒன்றை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

சமீபத்தில் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்து, தமிழகத்திற்கு மத்திய குழுவை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், திமுக எம்.பி. டி.ஆர். பாலு நேற்று நாடாளுமன்றத்தில் அவையை ஒத்திவைத்துவிட்டு, இது குறித்து விவாதிக்குமாறு வலியுறுத்தினார்.
 

இந்த நிலையில், நேற்று அவை முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று மக்களவையில் புயல் நிவாரணம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி நோட்டீஸ் அளித்துள்ளார். மேலும் இடைக்கால நிவாரணமாக 2000 கோடி வழங்குவது குறித்தும், மத்திய குழுவை அனுப்புவது குறித்தும் இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அதிமுக எம்பி துரை வைகோவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தனியாக ஒரு நோட்டீஸ் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.