
பீரிஸ் தலைமையில் இன்று மீண்டும் எதிர்க்கட்சிகள் பேச்சு!
முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட பேச்சுவார்த்தை இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. |
பாராளுமன்றத்தை அங்கத்துவம் செய்யும் அரசியல் கட்சிகள் மற்றும் செயற்பாட்டு ரீதியிலான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைந்து கொள்கை அடிப்படையில் பரந்துபட்ட அரசியல் கூட்டணி ஒன்றை அமைப்பதை இலக்காகக் கொண்டு இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் கடந்த வாரம் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் உருவாக்கப்படும் புதிய அரசியல் கூட்டணியின் தலைமைத்துவம் குறித்து அவதானம் செலுத்தப்படாத நிலையில் அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் பொது கொள்கையின் அடிப்படையில் கூட்டணியை அமைப்பதற்கு முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இச்சந்திப்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாட் பதியுதீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரமேஷ் பதிரன, செஹான் சேமசிங்க, லசந்த அழகியவன்ன, மயந்த திஸாநாயக்க, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, பாட்டலி சம்பிக்க ரணவக்க, இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இச்சந்திப்பின்போது நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைவரம், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படும் வகிபாகம், அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள 20 சதவீத பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த கூட்டணி தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் இதன்போது கலந்துகொள்ளவுள்ளனர். |