
பொருளாதார மீட்சி முழுமையடையவில்லை!
இலங்கையின் சமீபத்திய பொருளாதார செயல்திறன் வலுவாக இருந்த போதிலும், மீட்சி இன்னும் முழுமையடையாமல் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. |
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது இன்னும் நெருக்கடிக்கு முந்தைய நிலையை அடையவில்லை என்பதுடன் கணிசமாக வறுமையும் உயர்ந்துள்ளதாக உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மீட்சியை வலுப்படுத்துவதற்கு தொடர்ச்சியான பாரிய பொருளாதார ஸ்திரத்தன்மை, அவசர கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் பொது செலவினம் தொடர்பான சிறந்த இலக்கு என்பன தேவைப்படும் என உலக வங்கி கூறியுள்ளது. இலங்கை பொருளாதாரமானது 2025 ஆம் ஆண்டில் தொழில்துறையின் வளர்ச்சியினால் 4.6 சதவீதமாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக 2026 ஆம் ஆண்டு இலங்கை பொருளாதாரமானது 3.5 சதவீதமாக குறைவடையும் எனவும் உலக வங்கி கணித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம் இன்னும் 2018 அளவை விடக் குறைவாகவே உள்ளது. வறுமை குறைந்து வந்தாலும், 2019 ஐ விட இரு மடங்கு அதிகமாகவே உள்ளது. தொழிலாளர் சந்தை மீள்வது மெதுவாக உள்ளது மேலும் பல குடும்பங்கள் நெருக்கடியின் போது இழந்த வாழ்வாதாரங்களை இன்னும் மீட்டெடுக்கவில்லை. சனத்தொகையில் 10 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு சற்று மேலே வாழ்கின்றனர். மேலும் ஊட்டச்சத்து குறைபாடு ஒரு தீவிரமான பிரச்சினையாகவே உள்ளது. நீண்டகால வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், நிதிக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வறுமையைக் குறைப்பதற்கும், தனியார் துறை தலைமையிலான வளர்ச்சியை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பரந்த சீர்திருத்தத்தை வலியுறுத்தியுள்ளது. முக்கிய முன்னுரிமைகளில் வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான தடைகளைத் தளர்த்துவது, வணிகச் சூழலை மேம்படுத்துவது மற்றும் நிலம் மற்றும் தொழிலாளர் சந்தைகளை நிர்வகிக்கும் வரி நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறைகளை நவீனமயமாக்குவது என்பன அவற்றில் முக்கியமானதாகும் என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. |