ரணில் சத்தமில்லாமல் வெளியேறுவார்!

06.09.2024 09:00:56

எங்களுக்கு தெற்கு சிங்கள மக்களின் பெரும்பான்மை பெற்ற அரசாங்கமோ அல்லது வடக்கு மக்களின் பங்களிப்பு இல்லாத அரசாங்கமோ தேவையில்லை. வடக்கு, கிழக்கு தெற்கு மக்களின் நம்பிக்கையினை வென்ற ஒரு அரசாங்கமே தேவை என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

   

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கலைமகள் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சம்பிக்க ரணவக்க, ரிசாட் பதியூதீன் ஆகியோர் சஜித்துடன் இருக்கின்றனர். சஜித் பிரேமதாச வவுனியாவுக்கும் மன்னாருக்கும் வருகைதரும் போது சம்பிக்க ரணவக்கவை கூட்டிவரமாட்டார். ஆனால், காலிக்கு செல்லும்போது சம்பிக்கவை அழைத்துச்செல்வார். ஆனால், அங்கு ரிசாட் பதியூதீனை அழைத்துச் செல்லமாட்டார். என்ன அரசியல் இது. இதுதான் இரட்டை அரசியல்.

கொள்கை இருப்பது தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே. நாங்கள் அனைத்து இன மக்களின் உரிமைகளை உறுதிசெய்யும் புதிய ஒரு அரசியலமைப்பை உருவாக்குவோம். பிரதேச சபைகளில் இருந்து அதிகாரப்பகிர்வை வழங்கும்படியான ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்படும்.

இனவாதத்தினை மூலதனமாக்கி ஆட்சியினை பெற்ற மொட்டு கட்சி இன்று சுக்குநூறாகிப்போயுள்ளது. இனவாதம் சாதிவாதத்துக்கு தேசிய மக்கள் சக்தியில் இடமில்லை. இப்போதே இந்த நாட்டை கட்டியெழுப்ப ஆரம்பிக்கவேண்டும். விவசாயத்தை பாதுகாக்கவேண்டும். உங்கள் ஆபரணங்கள் எங்கே? அவை வங்கிகளில் இருக்கின்றன. எனவே இந்த விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும். விதை ஆராய்ச்சி நிலையங்களை புதுப்பிக்கவேண்டும்.

போதைப்பொருள் பின்புலத்தில் இருப்பது அரசியல்வாதிகளே. அது உங்கள் குழந்தைகளை பாதிக்கும். கிராமத்தை பாதிக்கும். அதனை முழுமையாக நாம் தடுத்து நிறுத்துவோம்.

எங்களுக்கு எவ்வாறான ஒரு அரசாங்கம் தேவை. தெற்கில் சிங்கள மக்களின் பெரும்பான்மை பெற்ற அரசாங்கமா அல்லது வடக்கு மக்களின் பங்களிப்பு இல்லாத அரசாங்கமா? அப்படியான அரசு எமக்கு தேவையில்லை. வடக்கு, கிழக்கு, தெற்கு மக்களின் நம்பிக்கையினை வென்ற ஒரு அரசாங்கமே எங்களுக்குத் தேவை. இதற்கு முந்தைய ஜனாதிபதிகள் உருவானது தெற்கில் இருந்து மட்டுமே. இம்முறை வடக்கு, கிழக்கு, தெற்கு மக்கள் இணைந்து தேசிய மக்கள் சக்தியை வெற்றிபெறச் செய்யவேண்டும்.

ரணில் கடைசி நேரத்தில் என்ன செய்வாரோ என்று கூறுகின்றனர். ஒன்றுமில்லை. அவர் தோல்வியடைவார். சத்தமில்லாமல் வீடு செல்வார். அது அவருக்கு பழக்கப்பட்ட ஒன்று.

இந்த கள்வர்களை, நாட்டையும் பொருளாதாரத்தையும் சீர்குலைத்தவர்களை, போதைப்பொருள் வியாபாரிகளை, உலகத்திடம் எங்களை அவமானப்படுத்தியவர்களை, போரை உருவாக்கியவர்களை, மூவின மக்களிடையில் சண்டைகளை உருவாக்கியவர்களை என அனைவரையும் ஒன்றாக தோற்கடித்து நாட்டை பசுமையாக்கி மக்களின் வாழ்க்கையினை அழகாக்கும் ஒரு புதிய அரசை கொண்டுவருவதற்காக நாம் பாடுபடுவோம் என்றார்