தாக்குதல்தாரியை தடுத்த நபருக்கு குவியும் நன்கொடை!

16.12.2025 14:37:04

சிட்னியின் பொண்டாய் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் போது, தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்த நபருக்காக அவுஸ்திரேலியா முழுவதிலும் இருந்து நன்கொடைகள் குவிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் மொத்தத் தொகை தற்போது 1.1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை (744,000 அமெரிக்க டொலர்கள்) தாண்டியுள்ளது.

துப்பாக்கிக் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டு மருத்துவமனையில் அவர் குணமடைந்து வரும் நிலையில், இந்த நன்கொடை அதிகரித்துள்ளது.

இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான 43 வயதான அஹ்மத் அல் அஹ்மத், நிறுத்தப்பட்டிருந்த சிற்றூந்துகளுக்கு பின்னால் பதுங்கி இருந்து, துப்பாக்கிதாரிகளில் ஒருவரைப் பின்புறமாகத் தாக்கிப் பாய்ந்தார்.

தாக்குதல் நடத்தியவரின் துப்பாக்கியைப் பறித்து, அவரைத் தரையில் தள்ளிய அஹ்மத்தின் செயல், மேலும் உயிர் இழப்புகளைத் தடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய காவல்துறை திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தாக்குதலை 50 வயதுடைய தந்தையும் அவரது 24 வயது மகனும் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த யூத கொண்டாட்டத்தின் போது நிகழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். கடந்த மூன்று தசாப்தங்களில் நாட்டில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச்சூடு இது என்று அதிகாரிகள் விவரித்துள்ளனர்.

இதற்கிடையில், அஹ்மத்துக்கு ஆதரவாக அமைக்கப்பட்ட 'GoFundMe' பிரசாரம், ஒரே நாளில் 1.1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலருக்கும் அதிகமாக நிதி திரட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.