பவன் கல்யாண் போடும் பலே திட்டம்.

21.06.2026 15:14:49

ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டணி அரசில் துணை முதல்வராக பொறுப்பு வகிக்கும் பவன் கல்யாண், தங்களது அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முறையாக கௌரவிக்கப்படுவதில்லை என்ற அதிருப்தியில் உள்ளார். 

 

இதன் காரணமாக அமைச்சரவை கூட்டங்களில் பங்கேற்பதை அவர் தவிர்த்து வருவதாகவும், தெலுங்கு தேசம் தனது கட்சியை ஓரங்கட்ட முயற்சிப்பதாக அவர் கருதுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் நடிகர் விஜய் அரசியலில் ஏற்படுத்தியுள்ள அதிரடி மாற்றங்களும், அவரது விரைவான அரசியல் வளர்ச்சியும் பவன் கல்யாணை பெரிதும் கவர்ந்துள்ளன. அதேபோன்றதொரு வலுவான அரசியல் செல்வாக்கை ஆந்திராவிலும் உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார். 

முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் அவரது மகன் லோகேஷும் டெல்லி பா.ஜ.க தலைவர்களுடன் நெருக்கமான உறவை பேணி வரும் அதேவேளையில், பவன் கல்யாணும் தனது அரசியல் செல்வாக்கை டெல்லி மட்டத்தில் பலப்படுத்தத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது மத்திய அமைச்சரவையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதை போல, தனது ஜனசேனா கட்சிக்கும் ஒரு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்பதில் பவன் கல்யாண் பிடிவாதமாக இருக்கிறார். தனது கட்சியின் சார்பில் இரு எம்.பி.க்கள் இருக்கும் சூழலில், வரவிருக்கும் மத்திய அமைச்சரவை மாற்றத்தில் தனக்கும் வாய்ப்பு கிடைக்கும் என அவர் எதிர்பார்க்கிறார்.

விஜய்யின் அரசியல் எழுச்சியால் உத்வேகம் பெற்றுள்ள பவன் கல்யாண், ஆந்திர அரசியலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தொடங்கியிருப்பது, அம்மாநில அரசியல் கூட்டணியில் பெரும் மாற்றங்களை உருவாக்கியுள்ளது.