அமோனியா வாயுக்கசிவு சம்பவம்.
|
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்துள்ள மஞ்சகரணையில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயக்கமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாய், மூக்கில் இருந்து ரத்தம் கசிந்ததால் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
|
மேலும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் தொழிற்சாலையின் உரிமையாளர் மோகன் (வயது 59) மற்றும் மேலாளர் டேனியல் (வயது 68) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாகத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர்கள் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் 24 மணி நேரத்திற்குள் இடைக்கால அறிக்கையும், 3 நாட்களுக்குள் இறுதி அறிக்கையையும் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவச் சிகிச்சை மற்றும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மீட்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாக கூறப்படுகிறது. |