சட்டவரைவு சட்டமானால் ஜனநாயகம் இல்லாதொழியும்!
|
அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு சட்டமானால் நாட்டில் ஜனநாயகம் இல்லாதொழியும். இந்த சட்டவரைவை நீக்க கோரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அறிவுறுத்த வேண்டும் என்று முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரிடம் வலியுறுத்தினார். |
|
எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கண்டி அஸ்கிரிய பீடத்துக்கு சென்று மகாநாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடும் போது மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கை பல்வேறு தரப்பிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது என்பதற்காக அரசாங்கம தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது. பொதுமக்களுடன் எவ்விதமான வெளிப்படையான கலந்துரையாடல்களும் இல்லாமல் தான் அரசாங்கம் புதிய கல்வி கொள்கையை அமுல்படுத்தியுள்ளது. நாட்டின் கலாசாரத்துக்கு எதிராக விடயங்களை கல்வி கொள்கையில் உள்ளடக்கினால் அது விளைவுகளை ஏற்படுத்தும். புதிய கல்விக் கொள்கை தொடர்பில் அரசாங்கம் சகல தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்விடயத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயற்பட வேண்டும். நீதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை காட்டிலும் பாரதூரமானது. பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு சட்டமானால் நாட்டில் ஜனநாயகம் இல்லாதொழியும், ஊடக சுதந்திரம் அரச அடக்குமுறைக்கு உள்ளாகும். ஆகவே இந்த சட்டவரைவை நீக்குமாறு மாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். |